காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என, இந்திய அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
எனினும், இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் சோனியா காந்தி தரப்பிலிருந்து விடுக்கப்படவில்லை.
ராய்பூரில் நேற்று (25) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85ஆவது அமர்வில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, “1998ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக நான் பொறுப்பேற்றது எனக்கு பெருமிதம் அளிக்கும் விடயம். 25 ஆண்டுகளில் கட்சி பல பெரிய சாதனைகளைப் படைத்தது, ஏமாற்றங்களும் இருந்தன” எனத் தெரிவித்தார்.
“2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் எங்களின் வெற்றியுடன் கூடவே டொக்டர் மன்மோகன் சிங்கின் திறமையான தலைமை எனக்கு தனிப்பட்ட திருப்தியை அளித்தது.
“ஆனால், காங்கிரசுக்கு திருப்புமுனையாக அமைந்த ‘பாரத் ஜோடோ யாத்திரையுடன்’ எனது இன்னிங்ஸ் முடிந்தது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
சோனியா காந்தியின் இந்த உரையைத் தவிர, குறித்த மாநாட்டில் அவரது பதவிக்காலம் குறித்த படமும் திரையிடப்பட்டது.
இதனையடுத்தே, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றாரா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழும்பியுள்ளது.