December 7, 2023 8:28 pm

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் கூட்டனியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இடம்பெறவுள்ளது.

கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள விதம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு இடையேயான நிலைப்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில், கூட்டணி அமைத்து களமிறங்கவுள்ளதாக தீர்மானித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்தின்போது, கூட்டணியின் பெயர் அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில், ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயர் இந்தப் புதியக் கூட்டணிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், கூட்டணியின் பொதுச் சின்னம் குறித்து இரண்டு தரப்புக்களும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், புதிய கூட்டணியின் சின்னமாக மொட்டு சின்னம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தவிசாளராக மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும்இ தேசிய அமைப்பாளர்களாக அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்