அரசின் புதிய நோக்கம்.

ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தற்போது இலங்கை உடனடி பொருளாதார அபவிருத்தியை அடைவதற்கான பிரதான சவாலுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த காலத்தில் முகங்கொடுத்த பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழுந்தமைக்கு மக்கள் பொருளாதார சுரண்டல்களுக்கு உள்ளாமை காரணமாக அமைந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இனம், மதம், மொழி அல்லது வசிக்கும் பிரதேசங்களை கருத்திற்கொள்ளாது சமூகத்தில் அனைவருக்கும் சமமான பொருளாதார சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்க முடியுமாக இருந்தால், இவ்வாறான பிரச்சினைகள் இலங்கையில் ஏற்படாதென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தகவல், தொடர்பாடல், தொழில்நுட்பத்துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

பொருளாதார முன்னேற்றத்திற்கான பிரதிபலன் சகலருக்கும் கிடைக்கும். விசேடமாக வறிய மக்களுக்கு அதன் பிரதிபலன் கிடைக்குமென ஜனாதிபதி உறுதியளித்தார். அவர்களை வறுமை நிலையிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தின் பங்காளர்களாக மாற்றி, அவர்களது வாழ்க்கைத்தரத்தை வேகமானதாகவும், நிலையான மேம்பாட்டுக்கு உட்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நவீன டிஜிட்டல் யுகத்தின் தேவைக்கேற்ப உயர் திறமைவாய்ந்தவர்களை உருவாக்க வேண்டும். தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை மிஞ்சிய தொழில்வாய்ப்புக்களுக்கு தேவையான திறன் அபிவிருத்தியை மக்களுக்கு வழங்குவதற்கான சவாலையும் அரசாங்கம் ஏற்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டாப்ய குறிப்பிட்டார்.

ஆசிரியர்