மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் மூடப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகம் இன்னும் சில தினங்களில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மூலம் மறுசீரமைக்கப்பட்டு பாவனைக்குக் கையளிக்கப்படும் என அமைச்சர்களுக்கான செயலாளர் தேசிய அமைப்பின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ விஜயசேகர குறிப்பிட்டார்.கொழும்பு வண்டர் ஹோட்டலில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்:-
பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது 1,600 கோடி  ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அசமந்த போக்கினால்   முடங்கி கிடக்கின்றது.  இலங்கையில் பருவப்பெயர்ச்சிக் காற்று காலநிலை நிலவிய காலப்பகுதியில் ஒலுவில் துறைமுகத்தில் அதிகப்படியான மண் தேங்கியது அதனை உரிய முறையில் அப்புறப்படுத்தாமல் மேலும் மண் தேங்கி தற்போது மீன்பிடிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலைக்கும்  தள்ளப்பட்டுள்ளது.
டென்மார்க் நிறுவனத்தின் தொழிநுட்பத்தில் அமைக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடித்தல் துறைமுகம் மூலம் மீன்பிடி  மட்டுமின்றி மீன்களை பொதி செய்தல் மற்றும் பதனிடல், களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏதுவான கட்டிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன,
இலங்கையின் மீன்கள் மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களும் இத் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள செப்பனிடுதல் தொழிற்சாலைகளின் மூலம் செப்பனிடக் கூடிய வசதிகளும் காணப்படுகின்றன. இதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல் மூடப்பட்டதன் காரணமாக சுமார் 25 ஆயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த  இரண்டு லட்சம் பேரளவில் வேலைவாய்ப்பில்லாமல் காணப்படுகின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளைச் சீரமைக்கும் வகையில் ஒலுவில் துறைமுகம் தொடர்பில் முழுமையான தகவல்களைத் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ஒலுவில் துறைமுகத்தினை புனரமைத்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் பதனிடல் மற்றும் பொதிசெய்தல் நடவடிக்கைகளுக்கும் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தேசிய நிறுவனமான டெஸ் நிறுவனம் ஒலுவில் துறைமுகத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தேங்கியுள்ள மண்ணை அகற்றவுள்ளது. மேலும் இதுபோன்றே இயற்கை காரணிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்படவுள்ளன.

ஆசிரியர்