கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது

COVID 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பில் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்

பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

பொதுமக்கள் அச்சமடையாது சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடும் பட்சத்தில், தொற்றுக்குள்ளாவதிலிருந்து தப்ப முடியும் என அவர் கூறினார்.

இதேவேளை, 16 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்களினூடாக 2258 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இன்று ஸ்தாபிக்கப்பட்ட COVID 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினூடாகவே அனைத்து அறிக்கைகளும் வௌியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மார்ச் 01 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வௌிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் இவர்களூடாக கொரோனா தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 1500 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

இவர்களில் 800 பேர் வரை புத்தளம் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.

ஆகவே, வௌிநாடுகளில் இருந்து வருகை தந்து புத்தளம் மாவட்டத்தில் வசிப்போர் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் வீடுகள் பாதுகாப்பு படையினரால் அடையாளப்படுத்தப்படவுள்ளது.

குறித்த வீடுகளுக்கு விசேட ஸ்டிக்கர்களை ஒட்டுவதனூடாக கிராமத்திலுள்ள ஏனையவர்கள் அறிந்துகொள்ள முடியும் என இராணுவத் தளபதி கூறினார்.

இதேவேளை, யாத்திரைகளுக்காக இந்தியாவிற்கு சென்றுள்ள 800 பேர் அங்கு தங்கியுள்ளனர்.

இவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக COVID 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வழங்கப்படும் பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றாதவர்கள் தொடர்பிலும், சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் தொடர்பிலும் பொலிஸார் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட 02 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆசிரியர்