கொரோனா தொற்று 50 ஆக அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்தார்.இதற்கமைய, நாட்டில் COVID 19 வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று முதல் சுற்றுலா, கேளிக்கை, களியாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் அறிவித்தார்.இதனிடையே, இந்தியாவில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்படும் இலங்கை யாத்திரிகர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவர் என COVID 19 தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனிடையே, COVID 19 தொற்று அறிகுறிகள் காணப்படுவோர் தொடர்பில் கடுமையான விதிமுறைகளின் கீழ் தனியார் வைத்தியசாலைகள் மாத்திரமே பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அத்துடன், வரையறை மற்றும் நிபந்தனைகளுடன் 6000 ரூபாவிற்கு குறைந்த கட்டணத்தில் COVID 19 தொற்று தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுக்க தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.இரவுநேர களியாட்ட விடுதிகள், சூதாட்ட நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறும் அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா வழிகாட்டிகளை தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்