வவுனியா பொதுவைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தருக்கு நடந்த கொடுமை.

வவுனியா பொதுவைத்தியசாலையில் தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது, அங்கு தனக்கு பாலியல் துன்புறுத்தல் இடம்பெறுகிறது என இளம் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளதை அறிந்தது.தனது மேலதிகாரியான தாதிய உத்தியோகத்தராலேயே அத்து மீறல் இடம்பெறுவதாக அந்த தாதிய உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்த இளம் சிங்கள பெண் தாதிய உத்தியோகத்தரே இந்த முறைப்பாட்டை, வைத்தியசாலை நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளார்.குறிப்பிட்ட நபர் தன்னுடன் வைத்தியசாலைக்கு வெளியில் தனிமையான இடங்களிற்கு வருமாறு வற்புறுத்துவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், தனது சொந்த இடத்திற்கே அனுப்பி வைக்குமாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென, வைத்தியசாலையின் முக்கிய பொறுப்பிலுள்ள சில வைத்திய அதிகாரிகள் விசனம் தெரிவித்தனர்.வடக்கு தாதிய தொழிற்சங்கமொன்றின் பிரமுகர் மீதே குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதனால்தான் அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க தீவிரம் காண்பிக்கவில்லையென்றும் சில தரப்பினர் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட யுவதி தனது முறைப்பாட்டை சமர்ப்பித்த திகதி, அதன் பின்னர் இன்று வரையான நாட்களில் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் வடக்கு சுகாதார திணைக்களம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து வடக்கு ஆளுனர் கவனம் செலுத்த வேண்டுமென சம்பந்தப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டவை உண்மையா, இல்லையா என்பதை அறிந்து கொள்ளவாவது முறையான விசாரணை நடத்தப்படுவது அவசியமல்லவா

ஆசிரியர்