த.தே.கூ. ஜனநாயக போராளிகளை பயன்படுத்துவது ஏன் | சுரேஷ் விளக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியின் விளிம்பில் நிற்பதால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளினுடைய பெயர்களைக் கூறுவதனூடாக வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளலாம் என நினைப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்காகத்தான், ஜனநாயகப் போராளிகளை வைத்து ஊடக சந்திப்புக்களை கூட்டமைப்பினர் நடத்துகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்கள் மீன் சின்னத்துக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என்று பரவலாகக் கருதுகின்றார்கள்.

இப்போதுள்ள, பிரச்சினை என்னவென்றால், ஒரு தோல்வியின் முகத்தில் நிற்கக்கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது ஜனநாயகப் போராளிகளுடன் இணைந்து அவர்களும் நாங்களும் ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டுவதன்மூலம் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டு செயற்படுகிறார்கள்.

ஆனால், ஜனநாயகப் போராளிகள் ஒரு புலனாய்வுப் பிரிவினர் என்று கூறியது சம்பந்தன் ஐயாதான். போராளிகள் எல்லோரும் சயனைட் சாப்பிட்டு இறந்துவிட்டார்கள் என்று கூறியது ஸ்ரீதரன். இன்றைக்கு தாங்கள் போராளிகள் என்று ஜனநாயக போராளிகள் கூறுகிறார்கள். ஆகவே தமிழ் மக்கள்தான் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கோ போராளிகளுக்கோ நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. ஆனால் அரசாங்கத்துக்கு விலைபோனவர்கள் தங்களை விடுதலைப் புலிகள் என முத்திரை குத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அவ்வாறு முத்திரை குத்திக்கொண்டு அவர்கள் பேசுவதென்பது விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் போராளிகள் அனைவரையும் கொச்சைப்படுத்துகின்ற செயற்பாடாகத்தான் இருக்கும்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியை பொறுப்பேற்போம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்சியின் தலைவர் இன்பராசா சொல்கிறார். ஒரு பக்கத்தில் ஜனநாயகப் போரளிகள், இன்னொரு பக்கத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் என்று இருக்கின்றார்கள். யார் யார் எதனைப் பொறுப்பேற்கப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. குறித்த இன்பராசா தரப்பினரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்பது வெளிப்படையானது

குறித்த இரு தரப்பினரும் போராளிகளாக இருக்கலாம். ஆனால் இவர்களை யார் கையாளுகிறார்கள், இவர்கள் ஏன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்?

ஒரு விடயம் வெளிப்படையாகத் தெரிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியின் விளிம்பில் நிற்பதால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளினுடைய பெயர்களைக் கூறுவதனூடாக வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளலாம் என்ற நோக்கில்தான் குறித்த தரப்பினருடன் ஊடக சந்திப்புக்களை அவர்கள் மேற்கொள்கின்றார்கள்” என்று குறிப்பிட்டார்.

ஆசிரியர்