நாட்டில் சுமார் 10 ஆயிரம் பேர் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர் | சஜித்

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாக  சுமார் 10 ஆயிரம் பேர் இந்த நாட்டில் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர் என  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு மற்றும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டமை ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக அரசாங்கத்திற்கு  வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆனால் அரசாங்கத்தினால் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்  சுமார் 4 இலட்சம் பேருக்கான தொழில் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாக  சுமார் 10 ஆயிரம் பேர் இந்த நாட்டில் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர்.

நாட்டின் ஏற்றுமதித்துறை அபிவிருத்தி செய்யப்படவேண்டும். கொரோனா தொற்று காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ள  சுற்றுலாத்துறை, துறைசார் சேவைகள் மற்றும் கட்டுமானப் பணிகள் என்பன  கட்டியெழுப்பப்பட வேண்டும்.

உற்பத்திதுறைகள் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஒரு சில மாதங்களுக்குள் அவை அனைத்தும் மீள கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என   குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்