Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நிலைமாறுகால நீதி என்ற சொல் இலங்கை அகராதியிலிருந்து நீக்கம்; UNHRCஇற்கு அறிவிப்பு

நிலைமாறுகால நீதி என்ற சொல் இலங்கை அகராதியிலிருந்து நீக்கம்; UNHRCஇற்கு அறிவிப்பு

3 minutes read

காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட அனைத்தும் அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்டவையாகும். எனவே ‘நிலைமாறுகால நீதி’ என்ற சொல் இலங்கை அரசாங்கத்தின் அகராதியிலிருந்து அகற்றப்பட்டிருப்பதுடன் அதனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டுவந்த நடவடிக்கைகள் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன என்று சர்வதேச மன்னிப்புச்சபை, இனவாதம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு மற்றும் ஏசியா ஃபோரம் ஆகிய மூன்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளன.

அதுமாத்திரமன்றி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களும் பொறுப்புக்கூறல் தொடர்பான சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவ்வமைப்புக்கள், இவ்வாறானதொரு பின்னணியில் 46ஃ1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் கடந்த 18 மாதகாலத்தில் மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருப்பதுடன் உண்மையைக் கண்டறியும் விடயத்தில் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உண்மை, நீதி, இழப்பீடு வழங்கல் மற்றும் மீள்நிகழாமையை உறுதிசெய்தல் என்பன தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியோலி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, இனவாதம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு மற்றும் ஏசியா ஃபோரம் ஆகிய மூன்றும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வெளியிட்டுள்ள வாய்மொழிமூல அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்புக்கள் மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கை தொடர்பில் ஐ.நா விசேட அறிக்கையாளரால் இனங்காணப்பட்ட பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உரியவாறான செயற்திட்டங்களை முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருக்கின்றது. குறிப்பாக காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளாக அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் முன்னாள் தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்டவை என்பதுடன் அவரது பதவிக்காலம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் முடிவிற்கு வந்துள்ளது. ‘நிலைமாறுகால நீதி’ என்ற சொல் இலங்கை அரசாங்கத்தின் அகராதியிலிருந்து அகற்றப்பட்டிருப்பதுடன் அதனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டுவந்த நடவடிக்கைகள் தற்போதைய நிர்வாகத்தின்கீழ் பின்னடைவைச் சந்தித்துள்ளமையினை அவதானிக்கமுடிகின்றது.

உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு சுயாதீனமான பொறிமுறையொன்று காணப்படவேண்டியதன் அவசியத்தை நாம் மீளவலியுறுத்துகின்றோம். நியமனங்கள் மற்றும் பதவி நீக்கங்களில் சுயாதீனத்தன்மை இல்லாதுபோயிருக்கும் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் மேற்கண்டவாறானதொரு பொறிமுறை சாத்தியமற்றதொன்றாகும். மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானம் நிராகரிக்கப்பட்டதுடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் தவிசாளராக நியமிக்கப்பட்டமையானது, மிகமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் நீதியைக்கோருகின்ற பாதிக்கப்பட்டவர்களிடத்திலே பாரிய அச்சத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவித்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி இதுவரையில் (வாய்மொழிமூல அறிக்கை பதிவுசெய்யப்படும் வரை) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மற்றும் ஆணையாளர்கள் தொடர்பான எந்தவொரு விபரங்களும் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவந்த இடைக்காலக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தைத் தொடர்புகொள்ளமுடியாத நிலையிலிருக்கின்றனர்.

அண்மையில் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், காணாமல்போனோர் பற்றிய உண்மையைக் கண்டறிவதற்குப் பதிலாக முறைப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கே காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் முயற்சிப்பதுபோல் தெரிகின்றது. குறிப்பாக உள்நாட்டுப்போரின்போது காணாமல்போன பலர் வெளிநாடுகளில் வசிப்பதாக, எவ்வித ஆதாரங்களுமற்ற கருத்தொன்று அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு தகவல்களை வழங்குமாறும் நாடுகளிடம் கோரியிருந்தார். இத்தகைய செயற்பாடுகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துடன் தொடர்புகளை பேணும் குடும்பங்களின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன.

சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி மட்டுப்படுத்தப்படல், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழான தன்னிச்சையான தடுத்துவைப்புச் சம்பவங்கள், அரச நிர்வாகசேவை பெருமளவிற்கு இராணுமயமாக்கப்படல் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மீறப்படல் ஆகிய விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் விசேட அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாகச் செயற்படுவதாக இலங்கை உறுதியளித்திருந்தாலும், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் தமது ஆரம்ப அறிக்கையைக் கையளிப்பதற்கு இலங்கை தவறியிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களும் பொறுப்புக்கூறல் தொடர்பான சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் 46/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முழுமையான ஆதரவை வழங்குமாறு விசேட அறிக்கையாளரிடமும் மனித உரிமைகள் பேரவையிடமும் கோருகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளன. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More