Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரண்டு பேருக்காக இழுபறியாகும் “ 21 ”

இரண்டு பேருக்காக இழுபறியாகும் “ 21 ”

5 minutes read

18 ஆவது திருத்தச்சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது என்றால் அது மஹிந்த மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகுவதற்கு மட்டுமே என சிறுகுழந்தையும் கூறி விடும்.

அது நாள் வரை இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்ற சரத்தை நீக்கி எத்தனை தடவையானாலும் ஒருவர் ஜனாதிபதியாகலாம் என்ற பிரதான அம்சத்தை மஹிந்த கொண்டு வந்தார்.

2009 ஆம் ஆண்டு போர் வெற்றி கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்தி 2010 ஆம் ஆண்டு இந்த திருத்தச்சட்டத்தை அவர் கொண்டு வந்த போது யுத்த வெற்றி போதையில் அவர் மதிமயங்கி கிடக்க நாட்டின் சிங்கள மக்கள் அதை விட மேலான ஒரு பேரினாவாத போதையில் மயங்கிக் கிடந்தனர்.

இந்த திருத்தச்சட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டவுடன் ஹொங்கொங்கை தளமாகக்கொண்ட மனித உரிமைகள் அமைப்பொன்று இலங்கையின் சுதந்திரமான ஜனநாயகம் இத்தோடு முடிவுக்கு வரப்போகின்றது என்ற எதிர்வு கூறலை முன்வைத்திருந்தது.

2015 ஆம் ஆண்டு வரை அந்த சுதந்திரமான ஜனநாயகம் நாட்டில் இல்லையென்பதை அனைவரும் அறிவர். ஆனால் அவ்வாண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் 19 ஆவது திருத்தச்சட்டம் ஒரளவுக்கு சுதந்திரமான ஜனநாயகத்தை உயிர்ப்பித்தது.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது மாத்திரமின்றி அவரின் பதவிக் காலங்கள் இரண்டு சந்தர்ப்பங்கள் என மட்டுப்படுத்தப்பட்டது. இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விடயமும் கொண்டு வரப்பட்டது.

எனினும் மீண்டும் ராஜபக்ஷக்களின் கைகளுக்குள் 2020 ஆம் ஆண்டு அதிகாரம் சென்ற பிறகு 19 ஐ செயலிழக்கச் செய்து விட்டு 20 ஐ கொண்டு வந்தனர்.

18 ஆவது திருத்தச்சட்டம் மஹிந்த என்ற தனிமனிதருக்காக கொண்டு வரப்பட்டது என்றால் 20 ஆவது திருத்தச்சட்டம் கோட்டாபய மற்றும் பஷில் என்ற இரண்டு பேருக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது எனலாம்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை, பாரம்பரிய அரசியல் பதவிகளை வகித்திராத ஜனாதிபதி கோட்டாபயவுக்கு இருந்தது.

அதே போன்று பாராளுமன்றுக்குள் பிரவேசித்து அதை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை பஷில் ராஜபக்ஷவுக்கு இருந்தது. 20 ஆவது திருத்தச்சட்டத்தில் இவை அனைத்துமே இடம்பெற்றன.

தற்போது மீண்டும் 21 ஆவது திருத்தச்சட்டம் ஒன்றுக்கு செல்ல வேண்டிய தேவையில் நாட்டின் சூழல் இருக்கும் போது, மீண்டும் அந்த இரண்டு நபர்களே இதற்கும் தடையாக இருக்கின்றனர். ஜனாதிபதி கோட்டாபய தனது அதிகாரங்களை விட்டுக்கொடுக்க தயாரில்லை.

அதே போன்று இரட்டை குடியுரிமை கொண்டுள்ள பஷில் ராஜபக்ஷவும் தனது அரசியல் பயணத்தை இன்னும் தொடர விரும்புகிறார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மேற்கூறிய இருவரினதும் தவறான கொள்கைகளே காரணம் என்பதை இலங்கை மக்கள் மட்டுமின்றி, இலங்கைக்கு உதவி செய்யும் உலக நாடுகளே அறியும்.

இந்நிலையில் பிரதமர் ரணிலுக்கு மேலும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் வழங்குவதற்கு இந்த இருவரும் மறைமுகமாக இயங்குகின்றனர் என்பது வெளிப்பட்டுள்ளது.

21 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற சரத்துக்கள் இருக்கும் பட்சத்தில், அதை நிறைவேற்ற விடாது தடுப்பதில் பஷில் மும்முரமாக இருக்கின்றார்.

பொது ஜன பெரமுன உறுப்பினர்களை உசுப்பேத்தும் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. மேற்கூறிய இரண்டு அம்சங்களும் இல்லை என்றால், 21 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை.

21 ஐ தடுப்பதில் பஷில் வெளிப்படையாகவே செயற்படுகின்றார் என்பது புரிகின்றது. ஆனால் இது குறித்து ஜனாதிபதி எந்த வித பிரதிபலிப்புகளையும் காட்டாது அமைதியாக இருக்கின்றார். அவர் தனது மிகுதி பதவி காலத்தை எப்படியாவது கொண்டு செல்வதற்கு பாடுபடுகின்றார்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டே 21 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்படும் என்ற தகவலை இது வரை கோட்டாபய எவ்விடயத்திலும் கூற வில்லை.

அல்லது புதிய திருத்தச்சட்டம் என்னென்ன விடயங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் பக்கமிருந்து எந்த கருத்துக்களும்இல்லை. ஆனால் புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்த சர்ச்சைகள் இன்னும் தொடர்கின்றன.

அது குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படவில்லை. இது சர்வகட்சி அரசாங்கம் என்றபடியினால் அதற்கான திட்டங்கள் இன்னும் வகுக்கப்படவில்லையென்பது முக்கிய விடயம்.

இதன் காரணமாக பொது ஜன பெரமுன எம்.பிகளுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதன் மூலம் 21ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க திட்டமிடப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக கடந்த வாரம் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்த போது தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் எவ்வாறு பிரதமர் பதவி வகிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதலில் பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற பிரவேசம் அரசியலமைப்பின் படி நீதியானதா என்பது பற்றி எவருமே ஆராய்ந்து பார்க்கவில்லை.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது பொது ஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியாக பஷில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அப்படி உள்ளடக்கவும் முடியாது. ஏனென்றால் அப்போது 19 ஆவது திருத்தச்சட்டமே அமுலில் இருந்தது.

அதன் படி இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிடவும் முடியாது தேசிய பட்டியலிலும் இடம்பெற முடியாது.

பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதியை அவர் கொண்டிருக்கவில்லை. பின்னர் கட்சியின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெயர் பரிந்துரைக்கப்பட்டு அவர் பாராளுமன்றுக்குள் அழைத்துவரப்பட்டார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதை பிரதானமாகக்கொண்டு 21 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே ரணில், பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

தற்போது வரையில் பிரதமரை பலவீனமாக்கும் முயற்சிகளில் பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் மீண்டும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இது மக்களின் போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கும் என்றே கூறப்படுகின்றது. எந்த வகையிலும் தமக்கு பாதமான அம்சங்களை கொண்டிருக்கும் சரத்துக்களை உள்வாங்கிய 21 ஆவது திருத்தச்சட்டத்தை ராஜபக்ஷக்கள் ஏற்க மாட்டர்.

எனினும் பொது ஜன பெரமுன உறுப்பினர்களின் கருத்து என்னவெனில் 19 ஆவது திருத்தச்சட்டம் தனி நபர்களை இலக்கு வைத்தும் , சில தனி நபர்களை திருப்திபடுத்துவதற்குமே கொண்டு வரப்பட்டது போன்று 21 உம் அப்படியானதாகவே இருக்கப்போகின்றது என்றும் அதற்கு ஆதரவளிக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.

தனது அதிகாரங்களை தக்க வைக்க 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் ஜே.ஆர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டு வந்தார்.

அதில் ருசி கண்ட பின் வந்த அரசாங்கங்களும் அதை தக்க வைப்பதற்கே முயல்கின்றன. ஜனாதிபதி கோட்டாபாயவும் அதில் விலக்கானவர் இல்லை.

நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு தமது அரசியல் நிரலை முன்னெடுக்கவே ஜனாதிபதிக்கு பின்னால் உள்ளவர்கள் விரும்புகின்றனர்.

ஆகவே அந்த சலுகைகளை இழப்பதற்கு அவர்கள் விரும்ப மாட்டர். ஏனென்றால் அரசியல் அதிகாரம், சொகுசு வாழ்க்கைக்கு சுவைத்தவர்கள் அதிலிருந்து மீள முடியாது. நிறைவேற்றதிகாரமும் அப்படித்தான்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More