இன்று (26) பிற்பகல் தம்புத்தேகமவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணம் வைப்பிலிடச் சென்ற வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ரூபா 2 கோடி 23 லட்சம் பணத்தை ஆயுத முனையில் கொள்ளையிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட இருவர், பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவரினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் பணத்தை கொள்ளையிட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பிச் செல்ல முயன்ற வேளையில் அவ்வழியாக பயணித்த தம்புத்தேகம பொலிஸ் நிலைய முறைப்பாட்டு பிரிவின் பொலிஸ் சார்ஜெண்டின் வீரச்செயல் மூலம் குறித்த பணத்துடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்திக குமார எனும் சார்ஜெண்ட் ஒருவரினாலேயே இவ்வாறு சந்தேகநபர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்சேகநபர்களும் 48 மற்றும் 50 வயதுடைய தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டா ஒன்றும் அரிவாள் கத்தி ஒன்றும், கையுறை ஒன்றும், கையடக்க தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தை நபர்கள் தற்போது தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, தம்புத்தேகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.