Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மெலிஞ்சிமுனையில் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக எழும் குரல்கள்

மெலிஞ்சிமுனையில் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக எழும் குரல்கள்

3 minutes read

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மெலிஞ்சிமுனை கடல், அங்கு வாழும் மீனவர்களினதும், அவரது குடும்பங்களினதும் பசியாற்றும் தாயாகவே உள்ளது.

இயற்கையின் சீற்றங்கள் எந்தளவு காணப்பட்டாலும், எந்தவொரு மீனவரையும் வெறுங்கையுடன் கரைக்கு அனுப்பாத கருணை நிறைந்த சிறு கடலாகவே மெலிஞ்சிமுனை கடலை அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பல்லின மீன் இனங்கள், நண்டு மற்றும் இறால் என பல கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கான கருக்களை சுமக்கும்  அரிய வகை பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் நிறைந்த ஆழமற்ற கடலாகவே இந்த மெலிஞ்சிமுனை கடல் காணப்படுகின்றது.

இந்த கடல் வளத்தை அழிக்கும் வகையிலும், அங்கு வாழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையிலும், அண்மைக்காலமாக கடல் அட்டை பண்ணைகளை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை பெரிதும் கவலையளிப்பதாக அங்குள்ள மீனவர்கள் குறிப்பிட்டனர். கடற்றொழிலை முன்னெடுப்பதற்கு பல்வேறு சவால்கள் இருக்கின்றன. அவற்றை தீர்த்து வைக்குமாறு அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவற்றை செய்யாமல் பிரதேச மீனவர்களையும் கடலையும் அழிக்கக்கூடிய கடலட்டை பண்ணைகளுக்கு பல இலட்சம் ரூபாய் செலவிடுவதாகவும் குறிப்பிட்டனர்.

கடல் அட்டை பண்ணையை எமது கடல் பகுதியில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரம்பத்திலிருந்தே அதனை நாங்கள் கடுமையாக எதிர்த்துப் போராடினோம். கடற்றொழில் அமைச்சின் ஊடாகவே  கடலட்டை பண்ணைகள் கொண்டுவரப்படுகின்றன.

எமது வாழ்வாதாரத்தை முற்றாக அழிக்கும் வகையிலேயே கடல் அட்டை பண்ணைகள் இங்கு கொண்டுவரப்படுகின்றன. இது சிறு மீன்பிடி தொழிலை முழுமையாக பாதித்து வருகிறது.

அமைச்சின் சிபாரிசுகளுடன் சிலர் தெரிவுசெய்யப்பட்டு, அவர்கள் ஊடாகவே கடலட்டை பண்ணைகளை ஸ்தாபிக்க முயற்சிக்கின்றனர்.

கடற்படையை கொண்டு பண்ணையை அமைப்பதற்கான பூர்வாங்க செயற்பாடுகளுடன் 60க்கு 60 என்ற பரப்பளவில் சுமார் 100 இரும்புத் தூண்கள் வரை நாட்டினர். அதனை எதிர்த்துப் போராடினோம். அப்போது கைவிடப்பட்ட போதிலும், வேறு வழிகளில் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக  மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பெனடிக் குறிப்பிட்டார்.

கடலட்டை பண்ணைகள் இந்த பகுதிகளில் ஸ்தாபிக்கப்படுமாயின், நண்டு மற்றும் இறால் உள்ளிட்ட சிறு மீன்பிடித்துறையில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படுவார்கள். அது மாத்திரமின்றி, பண்ணைகள் அமைக்கப்பட்டால், மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்படும். எனவே தான் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் மேலும் கூறினார்.கடலட்டை பண்ணைகளுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதிகாரிகள் திட்டத்தை இந்த பிரதேசத்துக்கு கொண்டுவராமல், முடக்கி வைத்திருந்தனர். ஆனால், கைவிடப்பட்ட திட்டம் மீண்டும் எவ்வாறு எமது கடல் பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது என்பதே தற்போதுள்ள கேள்விகளாகும்.

மீனவர்களின் நலன் குறித்து பேசுபவர்கள் இந்த கடலட்டை பண்ணைகள் குறித்து வாயை திறப்பதே இல்லை என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

அனலைத்தீவு பகுதியிலும் கடலட்டை பண்ணைகளை அமைத்துள்ளமையால் அங்குள்ள மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குறித்த கடலட்டை பண்ணைகளை அகற்றுவதற்கு தை மாதம் வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

மீனவ மக்கள் மாத்திரமல்ல, தீவக பகுதிகளில் வாழும் பொதுமக்களும் கூட கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

கடற்றொழிலாளர்கள் சங்கங்களுக்கு மறைத்து கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ஊடாகவே கடலட்டை பண்ணைகளை அமைக்க முற்படுகின்றனர்.

வடக்கு மீனவர்களுக்கு ஆதரவாகவும் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கடற்றொழிலை விட்டால் எமக்கு வேறு தொழில்கள் தெரியாது. எமது வாழ்வியலுக்கு எதிரான திட்டமாகவே கடலட்டை பண்ணைகளை கருதுவதாக மெலிஞ்சிமுனை மீனவர் இயேசு நாயகம் தெரிவித்தார். 

எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. நிலத்தை விட கடலிலே திரவியங்கள் அதிகம் உள்ளன. அவற்றை பாதுகாத்து எமது சந்ததியினருக்கு வழங்க வேண்டும் என்று மூதாதையர்கள் கூறியுள்ளனர். அந்த கடமையையும் செய்ய வேண்டியுள்ளதாக  மெலிஞ்சிமுனை மீனவர்கள் குறிப்பிட்டனர்.  இதே நிலைப்பாட்டையே 22நாள் தொடர் போராட்டம் மூலமாக  பூநகரி கிராஞ்சி இலவங்குடா மீனவர்களும் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது ,

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More