March 26, 2023 11:21 pm

ரணிலுக்கு மனோ அவசர கடிதம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை ‘நலிவுற்ற’ பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம் எழுதியுள்ளேன். இது தொடர்பான விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கி உதவுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினையும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் ஊடாகக் கோருகின்றேன். பெருந்தோட்ட த் துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினிச் சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்த நடவடிக்கை அவசர நிலையாகக் கருதி முன்னெடுக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் வறுமை பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் உலக வங்கி, இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 விகிதமாக உயர்ந்துள்ள வேளையில் பெருந்தோட்டத் துறையில் வறுமை 53 விகிதமாக அதீதமாக உயர்ந்து இருக்கின்றது.

அதேவேளை, ஐ.நா. உலக உணவு நிறுவனத்தின் இலங்கை பற்றிய அறிக்கையில் ‘உணவின்மை’, நகரத் துறையில் 43% என்றும், கிராமிய துறையில் 34% என்றும், பெருந்தோட்டத் துறையில் 51% என்றும் கூறுகின்றது.

ஆகவேதான், மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் முதல், மேல் மாகாண களுத்துறை, கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புக்களை ‘நலிவுற்ற’ பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும்.

நம் நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள, உணவின்மை பிரச்சினையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வர வேண்டும்.

இலங்கை முழு நாட்டுக்கும் இந்திய மத்திய அரசு வழங்கிடும் உதவிகள், மிகவும் நலிவுற்ற நிலையில் வாடும் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் இந்திய அரசின் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகின்றேன்.

பெருந்தோட்டத் துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினிச் சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்