September 22, 2023 3:42 am

இலங்கைப் பொலிஸாரின் அராஜகங்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமைதியான மற்றும் முறையான போராட்டங்களைத் தடுக்கும் அதேவேளையில், நிராயுதபாணிகளான பொதுமக்களைப் பொலிஸார் தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகின்றனர் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று மூன்று இடங்களில் நடைபெற்ற போராட்டங்களைப் பொலிஸார் அடக்கிய விதம் மிகவும் வெட்கக்கேடானது என்று அவர் தனது உத்தியோகபூர்வ ‘பேஸ்புக்’ பக்கத்தில் இட்டுள்ள பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

களுத்துறையில் இருந்து கொழும்புக்கு நடைபயணமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்களான இரண்டு பெண்களும் அவர்களுக்கு ஆதரவளித்த மக்களும் கைது செய்யப்பட்டமை இதன் உச்சக்கட்டமாகும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் பேரவையின் ஏற்பாட்டாளர் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இரண்டு பெண்களும் தமது எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்தனர்.

அங்கு வாதுவ, பாணந்துறை ஆகிய இடங்களில் பேரணியைத் தடுத்தப் பொலிஸார் கொரகபொல பிரதேசத்தில் வைத்து இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்துடன் மற்றுமொரு சம்பவத்தின் காட்சியையும் சாலிய பீரிஸ் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அதில் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கழுத்தைப் பிடித்து தள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

எந்தவொரு காரணத்துக்காகவும் பெண்களைத் துன்புறுத்துவதும் ஒடுக்குவதும், அமைதியான போராட்டங்கள் மற்றும் நிராயுதபாணியான பொதுமக்கள் மீது எந்த அடிப்படையும் இல்லாமல் கொடூரமாகத் தாக்குதல் நடத்துவதும் பொலிஸாரின் வெட்கக்கேடான செயல் என்றும் சாலிய பீரிஸ் கண்டித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் பொலிஸாரின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதை மேலும் எடுத்துக் காட்டுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்