பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றம்! – கூட்டமைப்பு, முன்னணி எதிர்ப்பு

2023 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 123 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் இடம்பெற்ற நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வாக்கெடுப்பைக் கோரினார்.

இதையடுத்து மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களான துமிந்த திஸாநாயக்க, ஜோன் செனவிரட்ன மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவரான அதாவுல்லா ஆகியோர் வாக்களித்தனர்.

அதேநேரம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. ஆகியவை வாக்களிப்பில் பங்கேற்காது வெளிநடப்புச் செய்தன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து இன்று மாலை சபையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 எம்.பிக்கள் அடங்கலாக 10 பேர் எதிராக வாக்களித்தனர்.

ஆசிரியர்