ரணில் இல்லையேல் நாடு மயான பூமியாகியிருக்கும்! – ‘மொட்டு’ தெரிவிப்பு

“ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்காது வேறு ஒருவர் பதவியேற்றிருந்தால் இந்த நாடு மயான பூமியாகியிருக்கும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ச பதவி வகித்த காலத்தில் அவர் போராட்டத்துக்கு முகம்கொடுக்க நேரிட்டார். மீரிஹானவில் உள்ள அவரின் வீட்டைச் சுற்றி வளைத்து ஆரம்பித்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்தைக் கைப்பற்றும் நிலைமைக்குப் போனது.

கோட்டாபய ராஜபக்‌ச அப்போது புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை எடுத்த போது பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, சரத் பொன்சேகா, அநுரகுமார திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் அந்தப் பதவிக்கு குறிப்பிடப்பட்டன. இதன்போது நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணங்கினோம். அனுபவம் உள்ள, சர்வதேசத்துடன் பேசக்கூடியவருக்கு அந்தப் பதவியை வழங்க இணங்கினோம்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்‌ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவும் நேரிட்டது. அன்று அவர் நாட்டை விட்டு போயிருக்காவிட்டால் அவர் இப்போது உயிருடன் இருந்திருக்கமாட்டார். அன்று அவர் கப்பல் மூலம் திருகோணமலைக்குப் போயிருக்காவிட்டால் அவர் உயிருடன் இருந்திருக்கமாட்டார்.

அப்போது ஏற்பட்ட ஜனாதிபதி பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க நாங்கள் இணங்கினோம்.

இதன்படி ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்காது வேறு ஒருவர் பதவியேற்றிருந்தால் இந்த நாடு மயான பூமியாகியிருக்கும் என்பதுடன், அவர் போராட்டக்காரர்களின் பணயக் கைதியாகிருப்பார். அத்துடன் போராட்டக்காரர்கள் நாட்டைச் சீரழித்திருப்பார்கள். ஆனால், ரணில் விக்கிரமசிங்க புதிய இராணுவம், பொலிஸார் இன்றி, இருந்த பாதுகாப்புப் பிரிவினரைக் கொண்டே போராட்டத்தை நிறுத்த நடவடிக்கைகளை எடுத்தார்” – என்றார்.

ஆசிரியர்