அடக்குமுறை மூலம் தீர்வு காண முடியாது! – ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு

தமிழர்களைப் புண்படுத்திக் கொண்டு அவர்களது பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களால் தீர்வு எதையும் காண முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இறுதி யுத்தம் 2009 மே மாதத்தில் முடிவுடைந்த பின்னரும் சிங்கள பெளத்த பேரினவாத வக்கிர அடிப்படைவாதம் குறையவில்லை. அதற்காகப் பல உண்மைகளைக் கூறலாம். அவற்றில் ஒன்றாத இருப்பது மட்டக்களப்பு மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் தாண்டியடியில் அமைந்துள்ள மறைந்த தமிழ் உறவுகளான மாமறவர்களின் துயிலும் இல்லமாகும். இங்கு மரணித்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகள் அமைந்துள்ள துயிலும் இல்லத்தின் மேலாக அதிரடிப் படையினர் முகாம் அமைத்துள்ளனர்.

கடந்த 13 ஆண்டுகளாக இந்த முகாம் செயற்பட்டு வருகின்றது. அதிரடிப் படைகளின் சப்பாத்துக்கால்களில் கீழ் சமாதிகள் மிதிபட்டுக் கொண்டிருக்கின்றன. மண்முனை மேற்குப் பிரதேச செயலகப்பிரிவில் பொலிஸ் நிலையம் ஒன்று இயங்கி வருகின்றது. அது இருக்கத்தக்கதாக, யுத்தம் இல்லாத காலத்தில் இந்த அதிரப் படை முகாம் எதற்கு என்ற கேள்வி எழுகின்றது.

தமிழர்கள் உயிரோடு இருக்கும் போதும் அவமதிக்கப்படுகின்றார்கள். அவர்கள் மரணித்த பின்னரும் அவமதிக்கப்படுகின்றார்கள் என்பதற்குத் தாண்டியடி அதிரடிப்படை முகாம் உதாரணமாக அமைந்துள்ளது.

இந்த முகாமை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கடந்த ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திக் கூறியிருந்தோம். அக்காலத்தில் வடக்கு, கிழக்கில் இருந்து பல முகாம்கள் அகற்றப்பட்டாலும், இந்த மரணித்த தமிழ் மறவர்கள் அடங்கிய மண்ணில் அமைக்கப்பட்ட முகாம் அகற்றப்படவில்லை. இது தமிழர்களுக்குரிய அடிப்படை உரிமைகளை உயிருள்ள போது மட்டுமல்ல, உயிரற்ற காலத்திலும் மறுக்கின்ற வக்கிர செயலாகவே அமைந்துள்ளது.

மறைந்த தமிழ் உறவுகளை நினைவில் ஏந்தும் காலத்தில் முகாமுக்கு அண்மையில் நினைவேந்தல் செய்வதற்கும் கூட பொலிஸார், அதிரடிப் படையினர் மிரட்டல்கள், எதிர்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2018 இல் முகாமுக்கு அண்மையில் நினைவேந்தலைச் செய்தோம். ஆனால், பொலிஸாரின் அழுத்தங்களும் கணப்பட்டன. பின்னர் சஹ்ரானின் ஆட்களால் இரு பொலிஸார் வவுணதீவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதையடுத்து நினைவேந்தலில் கலந்துகொண்ட முன்னாள் போராளிகள் மீது அந்தக் குற்றம் சுமத்தப்பட்டு அடைக்கப்பட்டனர், வதைக்கவும் பட்டனர்.

சஹ்ரானின் குண்டுவெடிப்பின் பின்னரே உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்ட பின்னர், முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டனர்.

நல்லிணக்கம் பற்றியும், ஒரு தாய்மக்களாக வாழ்தல் பற்றியும் வார்த்தைகளை வெளியிடும் ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க, இப்படியான தமிழர்களை அவமானப்படுத்தும் செயல்களுக்கு என்ன செய்யப் போகின்றார்?

முடியாட்சிக் காலத்தில் தமிழ் மன்னர் எல்லாளனின் சமாதிக்கு மக்கள் மரியாதை அளிக்கவேண்டும் என்று சிங்கள மன்னன் துட்டகைமுனு கூறியதாக வரலாறு கூறுகின்றது. ஆனால், மக்களாட்சிக் காலத்தில் என்ன நடக்கின்றது?

அடக்குமுறை அழிப்பு முறை, ஒடுக்குமுறைகளால் இந்த நாட்டில் எதையும் சாதிக்க முடியாது என்பதே 74 ஆண்டுகால வரலாறாகும்.

தமிழர்களைப் புண்படுத்திக் கொண்டு அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு எதையும் காண முடியாது. இதனை ஆட்சியாளர்கள் இன்னும் உணரவில்லை என்றால், நாட்டுக்கு விமோசனம் கிடையாது” – என்றுள்ளது.

ஆசிரியர்