மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது மிரிஹானவில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய மாணவன் ஒருவர் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகாமையில் நேற்றுக் காலை 6.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சோதனையின் போது 1.260 கிலோகிராம் ‘மாவா’, 9.630 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 2.38 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் கஞ்சா ஆகியவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதில் குறித்த மாணவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள்களை விற்பனை செய்பவர்கள் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.