Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ’13’ஐ அமுல்படுத்த வேண்டாம்! – விமல் போர்க்கொடி

’13’ஐ அமுல்படுத்த வேண்டாம்! – விமல் போர்க்கொடி

4 minutes read

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்துக்குள் பிளவுபடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்தினால் பிரிவினைவாத கொள்கையுடைய அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமே தவிர, தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மைப் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்க தீர்வு காண 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும்” என்று விமல் வீரவன்ச எம்.பி., ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவார் எனக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் குறுகிய காலத்தில் நாடு இரண்டாக பிளவடையும்.

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத,சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமே தவிர, தமிழ் மக்களின் உண்மைப் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்தும் இன அடிப்படையிலான பிரச்சினை, நாங்கள் அடையாளப்படுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் மனங்களை வெல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உண்மை.

தமிழ் மக்களின் அடிப்படையில் சர்வகட்சித் தலைவர் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் 2002 ஆம் ஆண்டு முன்வைத்த கொள்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம், வடக்கு, கிழக்கு மாகாண சபையை தற்காலிக அரசாக மாற்றியமைக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அப்போதைய பிரதமராக பதவி வகித்த நீங்கள் (ஜனாதிபதி)அதற்கு இணக்கம் தெரிவித்தீர்கள். அதற்கமைய ‘ஒஸ்லோ ஒப்பந்தம்’கைச்சாத்திடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், சர்வதேச பிரிவினைவாத அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை ஒன்றிணைத்து சிங்கப்பூர் நாட்டில் பேச்சில் ஈடுபட்டதுடன் ஒருசில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேகநபர்களை விடுதலை செய்வதன் ஊடாக தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்ளல், இராணுவ முகாம் மற்றும் அதனை அண்மித்த காணிகளை விடுவித்தல், மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான ‘எல்’ வலயக் காணிகளை பிரதேச செயலகம் ஊடாக விடுவித்தல், காணி கொள்கையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு மாத்திரம் காணிகளை வழங்கும் திட்டத்தை வகுத்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. காணாமல்போனார் அலுவலகம் சட்டத்தின் ஊடாக இயற்றப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவால் சர்வதேசத் தலையீடு தென்னாபிரிக்காவில் வெளிப்படையாகக் காணப்படுவதை அறியமுடிகின்றது.

2002 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறைவேற்ற முடியாத விடயங்களை 2023 ஆம் ஆண்டு நிறைவேற்ற முயற்சிப்பது நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் மக்களைத் திசைத்திருப்பி நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கீன்றீர்கள் என்பதை நன்கு அறிவோம்.

பிரிவினைவாதத்தில் இருந்து நாட்டைப் பாதுகாத்து, வடக்கு மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் 10 பிரதான யோசனைகளை முன்வைக்கின்றோம்.

இராச்சியத்தின் நிறைவேற்று அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விரிவுப்படுத்தி அதற்கு இணையாக மக்கள் சபை என்பததொன்றை உருவாக்கி அரச செயற்பாடுகளில் மக்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

நிறைவேற்று அதிகாரத்தை வினைத்திறனான முறையில் செயற்படுத்தும் வகையில் உள்ளூராட்சி சபைகளின் பிரதானிகளை உள்ளடக்கிய வகையில் உள்ளூராட்சி அபிவிருத்தி சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

உள்ளூர் அதிகார சபைக்குள் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதற்காக மத்திய அரசின் பிரதி அமைச்சரின் அதிகாரத்துடன் குறைந்தளவிலான அமைச்சரவை ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு விசேட சலுகைகள் ஏதும் வழங்கக் கூடாது.

நாட்டின் சகல இனங்களின் தேசியத்துவம் மதிக்கப்படுவதுடன், மதம் மற்றும் மொழி அடிப்படையில் வேறுபாடுகள் காண்பிக்கக் கூடாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும்.

பிரிவினைவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாக கொண்ட செயற்பாடுகளை தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தல், ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விசேட நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இராணுவத்தினர் மீது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும்” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More