June 8, 2023 5:52 am

ராஜபக்சக்களின் அக்கிரமங்களுக்கு எமது ஆட்சியில் தீர்வு! – சஜித் உறுதி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“நாட்டை அழித்து மக்களை வதைத்து ராஜபக்சக்கள் செய்த மோசமான அக்கிரமங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நீதி கிடைக்கும் – தீர்வு கிடைக்கும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘தீர்வற்ற நாட்டுக்குத் தீர்வு’ எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியால் தெஹியத்தகண்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தொடர்ச்சியான மக்கள் சேவையை வழங்கும் பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே நோக்கமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியால் நியமனமாகும் சகல உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் தனித்துவமான சட்ட ஒழுங்குமுறைகள் உள்ளன. அவற்றை மீறும் எந்தவொரு உறுப்பினருக்கும் தண்டனை பிறப்பிக்கப்படும். அவர்களுக்கு எதிராக தவறாது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.

எமது உறுப்பினர்களுக்கு ஒப்பந்தங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் சொத்துக்களுடன் விளையாடுவதற்கு அவர்களுக்கு அனுமதியில்லை. ஐக்கிய மக்கள் சக்தியால் விழுமியம் சார் உள்ளூராட்சி சபைகள் கட்டியெழுப்பப்படும்.

வரலாற்றில் எக்காலத்திலும் ராஜபக்சக்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது நானோ வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யவில்லை; பிரசாரக் கூட்டங்களை நடத்தவும் இல்லை. நாட்டை அழித்து மக்களின் வாழ்க்கையுடன் விளையாடும் எவராலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

நாம் ஆட்சிப்பீடம் ஏறினால் அரசியல்வாதிகள் உள்ளிட்ட நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருவோம். சர்வ கட்சிகள் அடங்கிய ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்போம்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்