Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையும் இந்தியாவும் நாணயத்தின் இரு பக்கங்கள்! – யாழில் ரணில்

இலங்கையும் இந்தியாவும் நாணயத்தின் இரு பக்கங்கள்! – யாழில் ரணில்

8 minutes read
  • நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசின் கொள்கை என்றும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் பொன்னம்பலம் இராமநாதன் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்கள் இணைந்து செயற்பட்டால் நாட்டை வேகமாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்திய அரசின், 1,350 கோடி ரூபா நன்கொடையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘கலாசார மத்திய நிலையம்’ இன்று (11) முற்பகல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“வணக்கத்துக்குரிய பௌத்த, இந்து, முஸ்லிம் கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்கு வணக்கம். இந்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் முருகனுக்கும், இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகருக்கும், எமது அமைச்சர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும், சபையில் கூடியிருப்போருக்கும் பெரியோருக்கும் வணக்கம்.

எமது 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் கொண்டாட நாம் தீர்மானித்தோம். அந்த வேலைத்திட்டத்தை நாம் இந்த கலாசார மையத்திலிருந்தே ஆரம்பிக்கின்றோம். இது எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொடுத்த பரிசு ஆகும். அதனால் அவருக்கும் இந்திய அரசுக்கும் நன்றி தெரிவிப்பதே நான் செய்யும் முதல் விடயம்.

இந்தியாவும் இலங்கையும் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களில் பிரதானமானதொரு அம்சம் இதுவாகும். ஒரு புறத்தில் இப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் மறுபுறத்தில் விசேடமாக திருகோணமலை துறைமுகத்தின் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பிலும் நாம் கலந்துரையாடி வருகின்றோம்.

வலு சக்தி தொடர்பிலும் நாம் பேச்சு நடத்தி வருகின்றோம். அதுபோலவே எமது பொருளாதார நெருக்கடியின்போது இந்தக் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கும் இந்திய அரசு எமக்கு வழங்கிய ஒத்துழைப்பை நாம் பாராட்டுகின்றோம்.

இந்தக் கலாசார மையம் ஒரு பொதுவான மையமாகும். நான் எப்போதும் கூறுவேன் எம்மிடையேயுள்ள கலாசாரத்தை வேறு பிரிக்க முடியாது என்று. ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் இலங்கை என்றால் மறுபக்கம் இந்தியாவாகும்.

எம்மிடமுள்ளது ஒரு கலாசாரம். அதனை நாம் பாதுகாத்து மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதனால் இந்த மையத்தை பொதுமக்களிடம் கையளிப்பதை முன்னிட்டு உங்கள் அனைவர் சார்பிலும் இந்தியாவுக்கும் இந்தியாவின் பிரதமருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

அதுபோலவே இன்று இந்த நடன நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களுக்கும் அதன் பின்னர் பங்கெடுப்பவர்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்களிடமிருந்து எமது சுதந்திரப் போராட்டத்துக்குக் கிடைத்த ஒத்துழைப்புக்காகவே 75ஆவது சுதந்திர தினத்தை நாம் இம்முறை யாழ்ப்பாணத்தில் கொண்டாடத் தீர்மானித்தோம்.

யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் ஆரம்பித்த இந்து மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தே ஹிக்கடுவே ஶ்ரீ சுமங்கள தேரர் பௌத்த மறுமலர்ச்சியை ஆரம்பித்தார். எனவே, ஆறுமுக நாவலர் முன்னெடுத்த பணிகளில் இருந்துதான் எமது சிங்கள தலைமைத்துவமும் உருவாகியது.

பொன்னம்பலம் இராமநாதனுக்கு நன்றி கூறும் வகையிலேயே வெசாக் தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையர்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் தலைவரே பொன்னம்பலம் இராமநாதன் ஆவார்.

1915 ஆம் ஆண்டு குழப்பங்கள் நிலவிய காலத்தில் எமது சிங்கள பௌத்த தலைவர்களைப் பாதுகாத்துக் கொடுத்தவர் பொன்னம்பலம் இராமநாதன் என நான் இவ்விடத்தில் கூற விரும்புகின்றேன்.

ஹென்றி பேதிரிஸின் வாழ்க்கையை பாதுகாக்குமாறு அவர் அப்போதைய ஆளுநருக்கு அறிவித்தார். அதற்கு பதிலாக ஹென்றி பேதிரிஸின் நிறைக்குச் சமனான தங்கத்தை தருவதாகக் கூறினார். எனினும், அது வெற்றியடையவில்லை.

பொன்னம்பலம் அருணாச்சலம் இலங்கை தேசிய சபையை உருவாக்கினார். தொழிற்சங்கங்களுக்கு தலைமைத்துவம் தாங்கினார். சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியிருந்த போதும் துரதிஷ்டவசமாக அவர் 1924ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதிலிருந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் எப்.ஆர் சேனாநாயக்க காலமானார்.

அவர் வாழ்ந்திருந்தால் இதை விடவும் வித்தியாசமானதொரு வரலாற்றை நாம் கண்டிருந்திருப்போம். சிங்கள கலையை எமக்கும் உலகுக்கும் தெரியப்படுத்தியவர் ஆனந்த குமாரசுவாமி . அவரின் காலத்திலேயே இது மேம்படுத்தப்பட்டது.

அருணாச்சலம் மஹாதேவாவும் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார். அது போலவே இந்து தர்மத்தை முன்னேற்றுவதற்கும் கொழும்பு சிவன் கோவிலை கட்டுவதற்கும் இங்கு கோயில்களை உருவாக்கவும் இந்த குடும்பம் உதவி செய்தது. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையின் சிங்களம், தமிழ், பௌத்தம், இந்து ஆகிய பிரிவுகள் முன்னேற உதவி செய்தனர்.

இலங்கையர் சார்பாகவும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்கள் சார்பாகவும் அக்குடும்பத்துக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அவர்களைப் போலவே வைத்தியலிங்கம் துரைசாமியையும் எம்மால் மறக்க முடியாது. சுதந்திரத்தைப் பெறுவதற்காக டி.எஸ் சேனாநாயக்கவுக்கு உதவிய அமைச்சர் சி.சுந்தரலிங்கம் , அமைச்சர் சி.சிற்றம்பலம், அமைச்சர் நல்லையா ஆகியோரையும் நாம் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டும்.

நாம் ஜி.ஜி பொன்னம்பலத்தையும் இங்கே நினைவுகூர வேண்டும். நாம் செல்வநாயகத்தையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும். அதுபோலவே அமைச்சர் எம்.திருச்செல்வத்தையும் நினைவுபடுத்துகின்றோம்.

இந்தத் தலைவர்களே ஏனைய தலைவர்களுடன் இணைந்து இலங்கையை உருவாக்குவதற்காகப் பணியாற்றினர். அதன் காரணமாகவே இப்பிரதேசத்தில், இந்த யாழ்ப்பாணத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இந்த அரசு தீர்மானித்தது.

நாம் தற்போது புதியதொரு பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இலங்கையர்களாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நல்லிணக்கம் தொடர்பில் நான் கடந்த 8 ஆம் திகதி அன்று பேசினேன். எனவே, அது பற்றி நான் இங்கே மீண்டும் பேசப் போவதில்லை. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் நான் நேற்று பேசினேன். அதனால் அது குறித்தும் நான் இங்கே பேசப்போவதில்லை. ஆனால், கலாசாரம் தொடர்பில் நான் இங்கு பேசப்போகின்றேன்.

இந்தத் தருணத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நல்லிணக்கம், அபிவிருத்தி, கலாசாரம் இவையே எமது கொள்கையாகும். யாழ்ப்பாணக் கலாசாரத்தில், தமிழ் கலாசாரத்தில் இலங்கையின் கலாசாரம் போஷணைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தமிழ் கலாசாரம் இலங்கையிலிருந்து உருவான கலாசாரம் என்பதுடன் இது தமிழ் நாடு மற்றும் கேரளாவுடனும் தொடர்புபட்டதொரு கலாசாரம் ஆகும். இது விசேடமாக தஞ்சாவூரிலிருந்து வந்த பாணடியன், விஜய நகர் இராச்சியங்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

சந்திரபாகு ஆட்சியாளர் முதல் ஆரியச்சக்கரவர்த்தி அரசர்களின் காலம் வரை, சப்புமல் புவனேகபாகு அரசரின் காலம், சங்கிலி மன்னனின் காலம் ஆகியவற்றின்போது விசேட கலாசார பிணைப்புகள் இப்பிரதேசத்தில் உருவாக்கப்பட்டன.

நல்லூரில் பாரிய கோயிலைக் கட்டுவித்தனர். அதுபோலவே சங்கிலிய மன்னரின் பாரிய மாளிகை இருந்தது. அன்று நிர்மாணிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளைப் பார்த்தால் அந்த மாளிகைகள் எவ்வளவு விசாலமானது என்பதைப் புரிந்துகொள்ளலாம். கோட்டை அரசருக்கு இதைவிட பெரிய மாளிகையொன்று அவசியம் என்றால் அவரது மாளிகை இதைவிட மிக பிரமாண்டமாக இருந்திருக்கும் என்று எம்மால் இதைப் பார்த்து ஊகித்துக்கொள்ள முடியும்.

‘சிராவஸ்தி மஹால்’ எனும் விசாலமான கலாசார மத்திய நிலையம் ஒன்று இருந்தது. தஞ்சாவூர் சிராவஸ்தி மஹால் அதற்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. பழைய புத்தகங்கள் இருந்தன. வரலாறு குறித்தும் மருத்துவ விஞ்ஞானம் தொடர்பிலும் பயன்படுத்தப்பட்டு வந்த செக்கராச சேகரம் என்ற நூலையும் திருக்கேதீஸ்வரத்தையும் போர்த்துக்கீசிலிருந்து வந்தவர்கள் அழித்ததுடன் அவற்றைத் தீயிட்டும் கொளுத்தினர்.

அதனால்தான் மீகபுள்ளே ஆரச்சி போர்த்துக்கேயருக்கு எதிராக இரண்டு கலகங்களை முன்னெடுத்தார். அவரை மறந்துவிட வேண்டாம். மீண்டும் இக்கலாசாரம் ஒல்லாந்து காலத்தில் இழக்கப்பட்டது. தேசவழமை சட்டமாக்கப்பட்டது. மீண்டும் வரலாறு புதுபிக்கப்பட்டது.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இது மீண்டும் மேம்படுத்தப்பட்டது. 1840இல் முதலாவது பத்திரிகை வெளியிடப்பட்டது. புத்தகங்கள் வெளிவந்தன. அதனுடாக மீண்டும் இலக்கியம் வளர்ந்தது. எனினும், யுத்தத்துடன் இவையனைத்தும் மீண்டும் அழிக்கப்பட்டன. நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. யாழ்.கோட்டை சிதைக்கப்பட்டது.

யுத்தம் நடந்தாலும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் அதுபோலவே வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோரும் இந்த தமிழ் கலையையும் கலாசாரத்தையும் பாதுகாத்தனர். இலங்கைக்கு உள்ளும் இலங்கைக்கு வெளியிலும் தற்போது அதற்கு புத்துயிர் கிடைத்துள்ளது.

திரைப்படம் உள்ளது. யுத்தம் பற்றிய புத்தகங்கள் உள்ளன. அதுபோலவே கலையும் உள்ளது. புதிய கலை உருவாகியுள்ளது. புதிய கலாசாரம் உருவாக்கப்பட்டு வருகின்றது. அதுபோலவே அனைத்து இடங்களில் இருந்தும் கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றன. நாம் இங்கே சம்பிரதாய தமிழ் இசையைக் கேட்கின்றோம். திரைப்படங்கள் ஊடாக நாம் தமிழ் பாடல்களை செவிமடுக்கின்றோம். அதுபோலவே ஏ.ஆர் ரஹ்மானின், ‘சின்னச் சின்ன ஆசை’யின் இசைக்கும் நாம் பாடல் பாடுகின்றோம். யொஹானியின், ‘மெனிக்கே மகே ஹித்தே’ என்ற பாடல் இசைக்கும் நாம் பாட்டு பாடுகின்றோம். இவ்வாறு கலாசாரம் புதிய கலை வடிவம் பெற்றுள்ளது. அதனை நாம் முன்னேற்ற வேண்டும்.

காலி இலக்கிய விழாவைப் போன்றே யாழ்ப்பாணத்திலும் நாம் ஓர் இலக்கிய விழாவை நடத்துவோம் என நான் கலாசார அமைச்சரிடம் கூறினேன்.

அதுபோலவே இங்கு நாம் புதிய கலையொன்றை முன்னேற்றுவோம். இலங்கைக் கலையின் ஒரு பகுதியாக இதனையும் உள்ளடக்குவோம். முக்கிய பகுதியாக அடையாளப்படுத்துவோம். இந்தப் பயணத்தை நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தூக்கி நிறுத்த வேண்டும். அப்போது இது எமது எல்லோரதும் நாடு ஆகும். இந்த இடம் தான் யாழ்ப்பாணத்தின் தமிழ் கலாசாரத்தின் மத்திய நிலையமாக இருக்க வேண்டும். அதனால் அமைச்சரே, நாம் இந்த இடத்திற்கு ‘சரஸ்வதி மஹால்’ என பெயரிடவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறுங்கள். நாம் புதிய எதிர்பார்ப்புடன் முன்னேறிச் செல்வோம். அனைவருக்கும் நன்றி” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More