Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாற்றியமைக்குக | ஐ.நா.விடம் சிவிகஸ் அமைப்பு வலியுறுத்தல்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாற்றியமைக்குக | ஐ.நா.விடம் சிவிகஸ் அமைப்பு வலியுறுத்தல்

2 minutes read

சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு சிவிகஸ் என்ற சர்வதேச சிவில் சமூக அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் உபகட்டமைப்பான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பில் மீளாய்வு செய்யும் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், இலங்கை தொடர்பான மீளாய்வு எதிர்வரும் 8 – 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மீளாய்வுக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி மனித உரிமைகள் அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி உலகளாவிய ரீதியில் சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் சிவில் சமூக இடைவெளியை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டிணைவான சிவிகஸ் அமைப்பு, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் தமது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. 

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய வியங்கள் வருமாறு:

இலங்கையில் கடந்த ஆண்டு பாரியளவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை செய்தி அறிக்கையிடச்சென்ற ஊடகவியலாளர்கள் மட்டுப்பாடுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். 

இருப்பினும் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களைப் பொறுப்புக்கூறச்செய்வதில் மிகக்குறைந்தளவிலான முன்னேற்றமே காணப்படுகின்றது. 

அதேபோன்று மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படவேண்டிய சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டமானது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்குவதற்கும், கொவிட் – 19 வைரஸ் பரவல் நெருக்கடியை அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. அதுமாத்திரமன்றி சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டமை மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும்.

மேலும் அண்மையகாலங்களில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு எதிராகத் தடைவிதிக்கப்பட்டமை, இடையூறு விளைவிக்கப்பட்டமை, போராட்டங்களை அடக்குவதற்கு மிகையான அளவில் பாதுகாப்புத்தரப்பினர் பயன்படுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன. 

அதுமாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் வலிந்துகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அடக்கமுறைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். போராட்டங்களுடன் தொடர்புடைய தரப்பினர் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட மிகமோசமான சட்டங்கள் ஊடாக இலக்குவைக்கப்படுகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஊடகவியலாளர்களும், விமர்சகர்களும் ஒடுக்குமுறைளகள் தொடர்பான எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகச் செயற்படக்கூடிய சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழு பரிந்துரைக்கவேண்டும்.

அதேபோன்று சர்வதேச சட்டங்கள், நியமங்களுக்கு அமைவாக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்தல், பொலிஸ் கட்டளைச்சட்டத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளல், போராட்டங்களின்போது மிகையானளவில் பாதுகாப்புத்தரப்பினர் பயன்படுத்தப்பட்டமை மற்றும் சட்டவிரோத படுகொலைகள் என்பன தொடர்பில் உடனடியானதும், உரியவாறானதுமான விசாரணைகளை முன்னெடுத்தல், பாதுகாப்பான சிவில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தல், சர்வதேச சட்டங்கள், நியமங்களுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைத்தல் ஆகிய பரிந்துரைகளையும் ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழு இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More