June 8, 2023 6:43 am

IMF ஒப்பந்தம் குறித்து விவாதம் கோரிய சஜித்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு செய்துகொண்ட உடன்படிக்கை தொடர்பில் விவாதம் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் முதல் தவணை கொடுப்பனவு கிடைத்துள்ளமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் இன்று விசேட உரை மூலம் அறிவித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ஜனாதிபதி நாடாளுமன்றில் முன்வைத்தார். இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அதற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தாம் விவாதத்துக்குத் தயாராக இருப்பதாகவும், இன்றைய தினம் இரண்டு நிதி சட்டமூலங்கள் சார்ந்த விவாதங்கள் நடைபெற இருப்பதால் அதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் விவாதத்தைத் தாமதிக்காமல் நடத்த வேண்டும் எனவும், தமது தரப்பினரின் கேள்விகளுக்கு அஞ்ச வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, எழுந்து நின்ற நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இலாபம் பெறும் நிறுவனங்களான ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் ஆகியவற்றின் பங்குகளை விற்பனை செய்வதன் ஊடாக அவற்றை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெற்றுக்கொண்டால், இலங்கை ரூபா அமெரிக்க டொலர்களாக மாற்றப்பட்டு நாட்டின் வருமானம் வெளியேறுவதற்கான சாத்தியம் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

இதற்கான சரியான தீர்வை சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டு தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் விமல் கேட்டுக்கொண்டார்.

விமல் வீரவன்ச உரையாற்றிக் கொண்டிருந்த போது சபையில் ஏனைய உறுப்பினர்கள் கோஷமிட்டு உரையைக் குழப்பும் வகையில் செயற்பட்டனர்.

உறுப்பினர்கள் அனைவரையும் அமைதிப்படுத்த சபாநாயகர் முயற்சித்துக் கொண்டிருந்த தருணத்தில் விமல் வீரவன்ச, “நீங்கள் இப்படி கோஷமிட்டால் கப்புடு காக்காவை அழைக்க வேண்டியிருக்கும்” – என்று எச்சரித்தார்.

இந்தநிலையில், ஜனாதிபதி கோரியமைக்கு அமைய நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமாயின், உடன்படிக்கையில் அனைத்து விடயங்களுக்கும் உடன்பட முடியாது. எதிர்க்கட்சியினரின் ஒரு சில யோசனைகள் மற்றும் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு தீர்மானங்களை முன்வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் ஏக குரலாக வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பரஸ்பரம் விவாதத்தை முன்னெடுத்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்