June 2, 2023 1:56 pm

மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக ஜனாதிபதி ரணில் வெற்றி பெறுவார் | நவீன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதைப் போன்று , அடுத்த கட்டமாக மக்களால் தேர்தல் மூலமும் ஜனாதிபதியாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படுவார்.

பொருளாதார நெருக்கடிகளை முற்றாக இல்லாதொழித்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக அவர் வெற்றி பெறுவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுடன் நாடு சிறப்பான முறையில் முன்னேற்றமடையும். வரி அதிகரிப்பு உள்ளிட்டவை மக்களுக்கு சார்பான தீர்மானங்கள் இல்லை என்ற போதிலும் , அவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. எனினும் பொருளாதார நெருக்கடிகள் தீர்க்கப்படும் அதேவேளை இவற்றுக்கான நிவாரணமும் வழங்கப்படும்.

அத்தோடு உத்தேச ஊழல் ஒழிப்பு சட்டத்திற்கமைய நாட்டில் ஊழல், மோசடிகள் முற்றாக இல்லாதொழிக்கப்படும். இதன் ஊடாக பொருளாதார மறுசீரமைப்புக்கள் ஒழுக்கத்துடன் முன்னெடுக்கப்படும்.

இவை அனைத்தையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரேயொரு தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே என்பதை எதிர்தரப்பினர் கூட ஏற்றுக் கொண்டுள்ளனர்.

படிப்படியாக அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுகள் குறைவடையும். நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன.

எனினும் அவை அனைத்தையும் முறியடித்து ஜனாதிபதி வெற்றி பெற்றுள்ளார். கடன் பெறுவது பெருமையல்ல. ஆனால் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமையில் நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

தேர்தல் இடம்பெறாவிட்டால் இந்த உதவிகள் எவையும் கிடைக்கப் பெறாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துக்கள் இன்று பொய்யாகியுள்ளன.

எல்லைய நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் 8000 ஆகக் காணப்படும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4000 ஆகக் குறைக்கப்படும். அதற்கான சட்ட மூலமும் நடைமுறைப்படுத்தப்படும்.

தற்போதுள்ள நெருக்கடிகளை முற்றாக நிவர்த்தி செய்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளும் தலைவராவார். இலக்கை நோக்கி பயணிக்கும் தலைவரான அவர் அதனை நிச்சயம் வெற்றி கொள்வார் என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்