Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

2 minutes read

ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது என்பது முட்டாள் தனமானது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது என அறக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாடசாலையின் ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களும் அதற்கு மேலும் மாணவர்களை அனுமதித்தல் என்னும் கல்வி அமைச்சின் முடிவானது முட்டாள்தனமானது.

இதனால் கிராமப்புற பாடசாலைகள் ஆயிரக்கணக்கில் மூடப்படும். மாணவர்களும் பெற்றோர்களும் நகர்ப்புறம்நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகும். கிராமங்களின் நிலவளம், தொழில்வளம், சமய சமூக கலாசார பண்பாட்டு விழுமியங்கள் முற்றாகக் கைவிடப்படும்.

மாணவர்களின் நடத்தைக் கோலங்கள் மாற்றமடையும்.வகுப்பறை அளவுகள் போதாமையால் உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்து மாணவர்களைக் கண்காணித்து கற்பிக்கும் சூழ்நிலை பாதிக்கப்படும்.  ஆசிரியத் தொழிலுக்கு இனிமேல் எவரும் உள்வாங்க முடியாத நிலை ஏற்படும்.

இவ்வாறான பாதகமான சூழ்நிலைகள் பல இருந்தும் அரசாங்கம் இத்தகைய முடிவினை எவருடனும் கலந்தாலோசிக்காமல் எடுத்திருப்பது முட்டாள்தனமான செயற்பாடு.

உலக நாடுகளிடம் கடனைப் பெறுகிறோம் என்பதற்காக உலநாடுகளில் உள்ள கல்விக் கொள்கைகளையும் வகுப்பறை நடைமுறைகளையும் புறந்தள்ளி இதனை நடைமுறைப்படுத்துவது ஆபத்தானது.

கல்வியால் உயர்ந்துள்ள பின்லாந்து நாட்டில் ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர் தொகை 600 ஐ விட அதிகரிக்க முடியாது.

அதிகபட்சம் 600 பேர் மாத்திரமே ஒரு பாடசாலையில் கல்வி கற்கலாம். வகுப்பறையொன்றில் அதிகபட்ச மாணவர் தொகை 26 ஆகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆயினும், பெரும்பாலான பாடசாலைகளின் வகுப்பறைகளில் சாராசரி மாணவர் தொகை 20 ஆகவே காணப்படுகின்றது.

இலங்கையில் இப்போதுள்ள சூழ்நிலையில் இருபது மாணவர்களை வைத்துக்கொண்டே ஆசிரியர்கள் படும் அவஸ்தை சொல்லில் வடிக்க முடியாதவை.

இந்த லட்சணத்தில் நாற்பது மாணவர்களை பதினைந்திற்கு இருபது அல்லது அதற்கும் குறைவான அளவுகளைக் கொண்ட வகுப்பறைகளுக்குள்ளே ஆறு மணிநேரம் அடைத்து வைத்து கல்வி புகட்டுவதால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதனை ஒவ்வொரு ஆசிரியரிடமும் முதலில் அறியவேண்டும்.

“ஆயிரம் பாடசாலைத்திட்டம்” “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்பதெல்லாம் எதற்கு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கேள்விகளாக முன்வைத்துள்ளது.

இதுபோன்ற சுற்றறிக்கைகளையும், தாபன விதிக்கோவைகளையும் நியமன நடைமுறைகளையும் மீறிய செயற்பாடுகள் கல்விப்புலத்தில் நிறையவே நடைபெறுக்கின்றன.

ஒரு மாவட்ட அரசாங்க அதிபரின் கணவர் என்பதற்காக அவர் ஓய்வுபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் புதிய   பாடசாலை ஒன்றிற்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இது வடக்கில் நடந்துள்ள புதுமை. அதிபராகப் பொறுப்பேற்பவர் குறைந்தது மூன்று ஆண்டுகள் சேவைக்காலம் உள்ளவராக இருக்க வேண்டும் என சுற்றறிக்கை கூறுகின்றது. அப்பாடசாலை உள்ள கல்வி வலயத்தில் பல பாடசாலைகளுக்கு அதிபர்களே இல்லை. குறித்த பாடசாலைக்கு நியமிக்கக்கூடிய பல அதிபர்கள் இருந்தும் அரசாங்க அதிபரின் கணவர் என்பதற்காக அவரை அதிபராக நியமித்திருப்பது நிர்வாக சேவையிலும், கல்வி நிர்வாக சேவையிலும் இருப்பவர்களை மிகவும் கீழ்த்தரமாக மதிப்பிடும் செயற்பாடாக இது பார்க்கப்படுகின்றது.

இப்படி உயர்நிலையில் இருப்பவர்கள் தவறாக நடந்தால் மற்றவர்களை எவ்வாறு வழிப்படுத்த முடியும் என்ற வினாவையும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.

இத்தகைய செய்திகளை ஊடகங்கள் வாயிலாக ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் தெரிவிக்கவேண்டிய கடமை எமக்கு உள்ளது. இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவை ஒவ்வொன்றாக இனி வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவோம் என சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More