June 5, 2023 11:05 am

இரு நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்தார் ரணில்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி, சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

மே மாதம் 24 முதல் 27 வரை ஜனாதிபதியின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய அணுகுமுறையின் ஊடாக வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொசிமாசா ஹயாசி, நிதி அமைச்சர் சுனிவ் சுசுகி மற்றும் டிஜிடல்மயமாக்கல் தொடர்பான அமைச்சர் டரோ கொனோ ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை, மே 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் டோக்கியோவில் நடைபெறும் ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28ஆவது சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான சர்வதேச மாநாடு என்பது, ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் மற்றும் உலகில் ஆசியாவின் பங்கு பற்றி பிராந்தியத்தின் தலைவர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு பாரிய சர்வதேச மாநாடு ஆகும். ஜப்பானின் ‘நிக்கெய்’ செய்தித்தாள் 1995 முதல் ஆண்டுதோறும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து வருகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் – இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் பேச்சுகளை நடத்தவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜப்பானுக்கு விஜயம் செய்தார். தற்போதைய பதவிக் காலத்தில் ஜப்பானுக்கான ஜனாதிபதியின் இரண்டாவது விஜயம் இதுவாகும்.

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் செண்ட்ரா பெரேரா ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்