December 7, 2023 3:41 pm

குருந்தூர்மலையில் பொலிஸின் அராஜகத்தை நியாயப்படுத்தும் அமைச்சர்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“தமிழ் மக்களுக்கும் சிங்கள – பௌத்தர்களுக்கும் இடையில் குருந்தூர்மலையில் ஏற்படவிருந்த முறுகலையே பொலிஸார் தடுத்தனர். பொலிஸார் மீது வீணாகக் குற்றம் சுமத்த வேண்டாம். தமிழ் மக்களில் ஒரு தரப்பினரே பொலிஸாருடன் வலிந்து மோதினர்.”

– இவ்வாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

குருந்தூர்மலையில் கடந்த வெள்ளிக்கிழமை வழிபடச்சென்ற தமிழ் மக்கள், பிக்குகளாலும் சிங்கள மக்களாலும் – பொலிஸாராலும் இடையூறு விளைவிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டமை தொடர்பில் சம்பவ இடத்தில் நேரடியாக இருந்த செய்தியாளர்கள் அறிக்கையிட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சம்பவம் தொடர்பில் பொலிஸார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது. குருந்தூர்மலையில் இரு தரப்பினருக்கும் இடையில் குழப்பம் ஏற்படக் கூடிய நிலைமை இருந்தது. அதை அமைதிவழிப்படுத்தவே பொங்கல் விழாவைச் செய்ய வேண்டாம் என்று பொலிஸார் தடுத்ததுடன் அங்கு வழிபட்டுச் செல்லுமாறு பொலிஸாரும், தொல்பொருள் திணைக்களத்தினரும் கூறினர். அதற்கு இணங்க தமிழ் மக்கள் செயற்பட்டனர்.

அங்கு வழிபடவந்த பௌத்தர்களும் வழிபாட்டுக் கடமைகளை முடித்துவிட்டு அமைதியாகச் சென்றனர். தமிழ் மக்களுடன் சென்ற ஒரு குழுவினர் வலிந்து பொலிஸாருடன் முட்டி மோதினர். காணொளியைப் பார்க்கத் தெளிவாகத் இது தெரிகின்றது.

சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது பொலிஸாரின் கடமை. அதை வன்முறை வழியில் தடுப்பதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. எனினும், குருந்தூர்மலைச் சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸ்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன்.” – என்றார்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்