December 7, 2023 10:42 am

வானத்தில் ஏறி நிலாவைத் தொட்ட பாரதம்! – மனோ வாழ்த்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலைப் பாரதம் தொடும் போது நாம் இங்கு தரைக்குக் கீழே தொல்பொருளைத் தேடுகின்றோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் பாரதம் சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக இந்திய இஸ்ரோ நிறுவனத்தின் “மூன் – ப்ராஜெக்ட்” வேலைத்திட்டப் பணிப்பாளர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞான தொழிட்நுட்ப அணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தச் சாதனையை எண்ணி, தென்னாசிய நாட்டவராகவும், இந்திய வம்சாவளி தமிழராகவும் பெருமையடைகின்றேன். ஆனால், வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலைப் பாரதம் தொடும் போது, நாம் இங்கு தரைக்குக் கீழே தொல்பொருளைத் தேடுகின்றோம் என்ற உண்மையை உணர்ந்து வருந்துகின்றேன்.

பாரதம் தந்த 13 பிளஸ் மாகாண சபையும் இன்று குருந்தூர் மலையில் ஏறி விழுந்து நிற்கின்றது. அது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்று இழுபறி படுகின்றது. சரித்திரத்தில் இருந்து பாடம் படிப்பதற்குப் பதிலாக, எல்லாப் பிரச்சினைகளுக்கும் சரித்திரத்துக்குள் நுழைந்து பதில் தேடும் தோற்றுப்போன நாட்டவராக நாம் இன்று இருக்கின்றோம்.

தொல்பொருள் அகழாய்வு பிரதேசம், மதங்களுக்கும், மத நிகழ்வுகளுக்கும் இடம் தராத பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக இருக்க வேண்டும். அது தொடர்பான எல்லா வரலாறு உண்மைகளையும் ஆவணப்படுத்தி ஆர்வலர்களுக்கு எடுத்துக் கூறும் அரச நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற முற்போக்கான சிந்தனையறிவு எமக்கு இல்லை. ஆகவே, ஒருநாள், மாலைதீவும் இப்படி “மூன் – ரொக்கட்” அனுப்பும் வரை நாம் இப்படி தொல்பொருளாராட்சியில் தேடி மோதிக்கொண்டே இருப்போம்.” – என்றுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்