சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று நீதி கோரி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்துக்கான பிரதான போராட்டம் இம்முறை மன்னாரில் நடைபெற்றது.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகரில் உள்ள சதொச மனிதப் புதைகுழிக்கு அருகாமையில் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி , முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசின் முப்படைகளாலும், துணை ஆயுதக்குழுக்களாலும் போருக்கு முன்பும் போருக்குப் பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி மன்னார் சதொச மனிதப் புதைகுழிக்கு அருகாமையில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டப் பேரணி ஆரம்பமாகியது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்பினர், சிவில் அமைப்பினர், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
மன்னார் சதொச மனிதப் புதைகுழிக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான பேரணி மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக ஓ.எம்.பி. அலுவலக வீதியைச் சென்றடைந்தது.
பின்னர் அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்தது.
இதில் கலந்துகொண்டவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களைச் சுமந்து பல்வேறு கோஷங்களை விண்ணதிர எழுப்பினர்.
பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கருத்துக்கள் வெளியிடப்பட்டதோடு, மகஜர் பொது வெளியில் வாசிக்கப்பட்டது.
அந்த மகஜரை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தலைமையிலான அருட்தந்தையர்களிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கையளித்தனர்.
இந்தப் போராட்டப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், முன்னாள் மன்னார் நகர பிதா ஞானப்பிரகாசம் ஜெராட், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.