ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல் 4 ஆவணப்படத்துக்கு எதிராகவும், அந்தத் தொலைக்காட்சிக்கு எதிராகவும் அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய இயக்கத்தால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்துக்குக் கோரிக்கைக் கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அங்குனுகல்லே ஸ்ரீ வினாநந்த தேரர்,
“சனல் 4 ஆவணப்படம் இலங்கைப் புலனாய்வுப் பிரிவை இலக்கு வைத்து போலியான தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் போலியானவை என்பதைக் கூட உறுதிப்படுத்தப்படாமலேயே வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பாதுகாப்புத் துறையின் பிரதானிகளுக்கும் தெரிவித்துள்ளதோடு, போலியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் இவ்வாறான தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.
மேலும், போலித் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சுயாதீன நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் மீது சுமத்தப்பட்டுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரிட்டன் அரசையும் வலியுறுத்துகின்றோம்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கியே கடிதத்தையே பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்தில் கையளித்துள்ளோம்.” – என்றார்.