செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உண்மையைத் தெளிவுபடுத்துமாம் ஜனாதிபதி விசாரணைக் குழு! – இப்படி நம்புகின்றார் பிள்ளையான்

உண்மையைத் தெளிவுபடுத்துமாம் ஜனாதிபதி விசாரணைக் குழு! – இப்படி நம்புகின்றார் பிள்ளையான்

1 minutes read
“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ‘சனல் 4’ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள், மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றபடியால் அது தொடர்பில் விசாரித்து உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு. அந்தக் கடமையைச் செய்யவே விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். எனவே, இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உண்மையைத் தெளிவுபடுத்தும் என்று நான் நம்புகின்றேன்.”

– இவ்வாறு இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ‘சனல் 4’ தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவை நியமித்துள்ளார். விசாரணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சீ.எம்.ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ச ஏ.ஜே.சோசா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘சனல் 4’ தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் ஒருவரான இராஜாங்க அமைச்சர் பிள்ளையான், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பில் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஆஸாத் மௌலானா என்ற நபர், இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பதற்கும், தான் வெளிநாட்டில் தஞ்சம் அடைவதற்குமே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ‘சனல் 4’ தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். இதை ஊதிப்பெருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஐ.எஸ். என்றால் என்ன?, அந்தத் தீவிரவாத  அமைப்பினர் ஏன் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்? என்பதை சாதாரண அறிவு உள்ளவர்களே புரிந்துகொள்ள முடியும். எனினும், மக்கள் சிலர் தெளிவு இல்லாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உண்மையைத் தெளிவுபடுத்தும் என்று நான் நம்புகின்றேன்.

நான் சிறையில் இருக்கும்போதே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த குழுக்களிடம் சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளேன். எனவே, ‘சனல் 4’ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மையைத் தெளிவுபடுத்த ஜனாதிபதி நியமித்துள்ள விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்க நான் தயங்கமாட்டேன்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.