மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ஒருவர் நேற்று (15) முதல் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகளூர் முதலாம் பிரிவு, நீலகிரி வீதியைச் சேர்ந்த ரமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
“எனது பெற்றோர் கஷ்டப்படுகின்றனர். அதனால் என்னைப் பார்க்க முடியாத நிலையில் அவர்கள் இருக்கின்றனர். என்னைப் பார்க்கக் கூடிய சிங்கள வீடு ஒன்றுக்குச் செல்கின்றேன்” – என்று கடிதம் ஒன்றை குறித்த சிறுமி சம்பவ தினம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுமியின் தந்தை மேசன் தொழில் செய்து வருகின்றார் எனவும், மூத்த சகோதரன் திருமணம் முடித்துச் சென்றுள்ளார் எனவும், சிறுமியும் அவருடன் சகோதரன் ஒருவர் உட்பட இருவர் பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றனர் எனவும், பெற்றோர் கஷ்டப்பட்டு வருகின்றனர் எனவும், தந்தையின் தாயாரான அப்பம்மா மற்றும் உறவினர்கள் மாத்தளையில் வசித்து வருகின்றனர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக சிறுமி அப்பம்மாவுடன் வாழ்ந்து வந்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
காணாமல்போன சிறுமி தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடிக் குற்றத் தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.