துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு, அவிசாவளை – தல்துவ – குருபஸ்கொட பகுதியில் நேற்றிரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அவிசாவளையிலிருந்து கேகாலை நோக்கி 4 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோவை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும் அவிசாவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது இருவர் உயிரிழந்துள்ளனர் என்று அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தல்துவ பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 36 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 43 வயதுடைய இருவரும் படுகாயங்களுடன் அவிசாவளை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒருவரை இலக்கு வைத்து இதற்கு முன்னரும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது என்று பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவ இடத்தில் 20 இற்கும் மேற்பட்ட ரி – 56 ரக துப்பாக்கி ரவைகள் காணப்படுகின்றன என்று தெரிவித்துள்ள அவிசாவளை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.