Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் நாளை மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்!

யாழில் நாளை மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்!

3 minutes read
“அன்புக்குரிய எம் தமிழ் பேசும் மக்களே! பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த மனித சங்கிலிப் போராட்டம்  மருதனார்மடத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பித்து யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, இந்தப் போராட்டத்தில் மாபெரும் மனிதச் சங்கிலியாகக் கைகோர்த்து, நீதி கோரிட திரண்டு வாருங்கள் என உங்கள் அனைவரையும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளாகிய நாம் உரிமையுடன் அழைக்கின்றோம்.”

–   இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிம் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

அந்தக் கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாது:-

“எமது சொந்த மண்ணில், முல்லைத்தீவு மாவட்டத்தில், குருந்தூர்மலையில் அமைந்திருக்கும் வரலாற்றுத் தொன்மை மிக்க இந்து ஆலயத்தின் சிதைவுகளையும் சிதிலங்களையும் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில், பழைய பௌத்த விகாரை ஒன்றின் மிச்ச மிகுதிகளாகவும், எச்ச சொச்சங்களாகவும் உரிமை பாராட்டி, அங்கே பௌத்த விகாரை ஒன்றை கட்டியெழுப்ப பௌத்த சிங்களப் பேரினவாதிகள் முன்னெடுத்து வந்திருக்கும் முயற்சிகளை நீங்கள் அறிவீர்கள்.

பேரினவாதிகளின் ஆக்கிரமிப்புக்கும் அடாவடித்தனத்துக்கும் எதிராக, எமது மக்கள் தரப்பில் காட்டப்பட்ட எதிர்ப்பினால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வந்த நிலையில், புதிய கட்டுமானங்கள் எதுவும் நிறுவப்படக்கூடாது என்று நீதிமன்று வழங்கிய கட்டளையை மீறி, அவசரம் அவசரமாக புதிய விகாரை ஒன்று, அதிகாரத் தரப்பின் ஆதரவோடு கட்டப்பட்டு, முற்றுப்பெறும் நிலையில் எழுந்து நிற்கின்றது.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழ் மக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முறையீடுகளின் பேரில், அவற்றை நிறுத்த முயன்ற மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவை அடிபணிய வைக்க முயன்று, முடியாமல் போன இனவாத சக்திகள், நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் துவேசக் கண்டனங்களையும் கீழ்த்தரமான விமர்சனங்களையும் வெளியிட்டு பிரச்சாரப் போர் ஒன்றை தொடுத்து வந்திருந்தன.

இந்தச் சூழ்நிலையின் உச்சக்கட்டமாக, அதிகார மட்டத்தில் இருந்து அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நீதிபதி மீது பிரயோகிக்கப்பட்டன.

இந்தக் கேவலமான நடவடிக்கைகளுக்கு மனோ ரீதியாகத் தொடர்ந்தும் தாக்குப் பிடித்து நிற்க முடியாத நிலையில், நீதிபதி சில தினங்களுக்கு முன்னர் தனது பதவியைத் துறந்து, நாட்டை விட்டே வெளியேறிச் சென்றுள்ளார்.

இத்தனைக்கும் அவர் செய்த ஒரே தவறு, வளைந்து கொடுக்காமல், அடிபணியாமல் துணிச்சலோடும் நேர்மையோடும் தனது கடமையை சட்டத்தின் வழி நி;ன்று செய்ததே ஆகும்.

ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் இருப்புக்கும், உரிமைக்கும், வாழ்வுக்கும் துணை நின்றே அவர் இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.

இது மிகப் பாரதூரமான நிலைமை! துன்பத்தில் துவளும் எமது மக்களின் கடைசி நம்பிக்கையாக ஓரளவுக்கேனும் இருந்து வந்திருக்கும் நீதித்துறைக்கே சவால் விடுக்கப்படும் அபாயகரமான நிலைமை!!

இதனை நாம் எல்லோரும் கைகட்டிப் பார்த்திருக்க முடியாது. எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

இந்தச் சூழ்நிலையில், இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் இருப்பும், அடிப்படை உரிமைகளும் தொடர்ந்தும் குறிவைத்துத் தாக்கப்படுவதை உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் தீவிரமாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.

இலங்கை அரசின் பேரினவாத அரசியல் சித்தாந்தமும், நிகழ்ச்சி நிரலும் எம் மீது அராஜக அடக்குமுறைகளாக மீண்டும் மீண்டும் பாய்வதை, உலகின் கண்களுக்கு முன் நாம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.

செய்யக் கூடாததை எல்லாம், எண்ணிக்கையில் சிறுபான்மையினராக வாழும் தமிழ் பேசும் மக்களுக்குச் செய்து கொண்டு, நாகரிக நடத்தை கொண்ட நல்ல பிள்ளையாக வெளியுலகுக்கு முன் நாடகமாடும் இலங்கை அரசின் வஞ்சகத் தந்திரங்களையும், பொய்கள் நிறைந்த பிரசாரத்தையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

ஆகவே, ஓரணி திரண்டு, நேர்வழி நின்று நீதி கோரி நாம் எழுப்பும் உரிமைக் குரல்கள் ஆக்ரோசத்துடன் ஆர்ப்பரித்து எழவேண்டும்.

எனவேதான், தொடர்ந்து கொண்டிருக்கும் பேரினவாத ஆக்கிரமிப்புக்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் அராஜகத்துக்கும் எதிரான எமது மக்களின் எதிர்ப்பியக்கத்தின் முதற்கட்டமாக நாளை 4ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ். நகர் வரையில், காங்கேசன்துறை வீதி வழியாக, மாபெரும் மனிதச் சங்கிலியாக கைகோர்த்து, நீதி கோரிட திரண்டு வாருங்கள் என உங்கள் அனைவரையும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளாகிய நாம் உரிமையுடன் அழைக்கின்றோம்.

மேலும், எம் மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட மாணவர் அமைப்புக்கள், மகளிர் உரிமை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் கழகங்கள், சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் உட்படப் பல்துறை சார்ந்த செயற்பாட்டு இயக்கங்களின் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் நாம் நாடி நிற்கின்றோம்.

எங்கள் கைகள் இணையட்டும்! அடிமை விலங்குகள் உடையட்டும்!!” – என்றுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More