December 8, 2023 10:50 pm

தேர்தல் நடந்தே தீரும்! சந்தேகம் வேண்டாம்!! – தினேஷ் உறுதி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
“தேர்தலை நாம் இரத்துச் செய்யவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசு உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது. நாடு வங்குரோத்து நிலையில் இருந்தபோதே உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அந்தநிலையிலேயே நிதி அமைச்சின் செயலாளர் போதியளவு நிதியை வழங்க முடியாது எனத் தெரிவித்திருந்தார்.”

– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (18) பிரதமர் தினேஷ் குணவர்த்தன தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அது தொடர்பில் கேட்ட கேள்விக்குப்  பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதால் தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சில பகுதிகளுக்கு உறுப்பினர்கள் இல்லாமல் போவதால் ஏற்படும் நிலைமை தொடர்பிலும் அனைவரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

அதனைக் கருத்தில்கொண்டு அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாடு வங்குரோத்து நிலையில் இருந்தபோதே உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அந்தநிலையிலேயே நிதி அமைச்சின் செயலாளர் போதியளவு நிதியை வழங்க முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

தனிப்பட்ட ரீதியில் தேர்தலுக்குச் செலவிடுவதற்கு நிதி கிடைக்கலாம். ஆனால், அரசு என்ற வகையில் அதற்கான நிதியை விடுவிக்க முடியாத நிலையிலேயே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொண்டு கலப்புத் தேர்தல் முறைமை ஒன்றைக் கொண்டு வருவோம் என நாட்டுக்குத் தெரிவித்தே மக்கள் ஆணையை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.

அது தொடர்பில் எமது அரச தலைவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் பல தடவைகள்  தெரிவித்துள்ளார்கள். நாம் வரவு – செலவுத் திட்டத்துக்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ளும்போதும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் இரு தரப்பினரும் கேட்டுக்கொண்டதாக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைச் செயற்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை கலப்பு முறையில் நடத்துவது தொடர்பான யோசனைகள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்ஷ அந்த யோசனையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளார்.

அதற்கிணங்க அமைச்சரவையானது நாடாளுமன்றத்தில் அனைத்து  உறுப்பினர்களினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு மீண்டும் அறிவிக்குமாறு தெரிவித்திருந்தது.

அனைத்து மக்களினதும் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கு நாடாளுமன்றத்திலும் மூன்று விசேட தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதன் மூலம் நாடாளுமன்றத்துக்கு விடயங்கள் கோரப்பட்டுள்ளன.

மாகாண சபை தொடர்பான தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுத்தபோது அதில் பெருமளவு திருத்தங்கள் உள்ளீடு செய்யப்பட்டு நிறுத்தப்பட்டன. அதனை மீண்டும் கொண்டு வருவது தொடர்பில் தெரிவுக்குழு  அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நாம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணை மற்றும் அதனைச் செயற்படுத்த முடியுமா? இல்லையா? என்பது தொடர்பில் பேச்சு நடத்தி ஜனநாயக ரீதியில் கருத்துக்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக அரசியல் கட்சியின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பங்குபற்றுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சந்தேகத்துடன் பார்த்து அரசியல் தீர்மானம் மேற்கொள்ள முடியாது என்பதை நான் எதிர்க்கட்சித் தலைவருக்குக் குறிப்பிட விரும்புகின்றேன்.

இதற்கு முன்னர் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட அரசமைப்பின் 20ஆவது திருத்தம் மற்றும் 21ஆவது திருத்தம் ஆகியவற்றிலும் இந்தத் திருத்தங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளன. சந்தேகமின்றி நாம் உண்மைத்தன்மையுடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்