December 10, 2023 12:08 am

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்! – ரணில் உறுதி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
“இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே எனது நோக்கம். நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் அரசமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

‘ஸ்மார்ட் நாடு – 2048ஐ வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், திருத்தப்பட்ட கட்சியின் புதிய யாப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒன்லைன் மூலம் அமைப்புக்களை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் நாட்டுக்கு முன், ஐக்கிய தேசியக் கட்சி ஸ்மார்ட் கட்சியாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“என்னில் இருந்து ஆரம்பிப்போம்” என்ற குறியீட்டை அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘சிய ரத’வின் பழைய இதழ் ஒன்று அதன் ஸ்தாபகரான திருமதி மாயா களுபோவிலவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்ப சகல துறைகளிலும் ஊழலை ஒழிக்க வேண்டும். அதற்காக அரச நிறுவனங்களிலும் அரசியல் கட்சிகளிலும் ஊழலைக் கட்டுப்படுத்த பல கட்டளைச் சட்டங்கள் கொண்டு வரப்படும்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி பலமடைய வேண்டும். எதிர்காலத்தில் நாட்டுக்காகப் பரந்த பங்களிப்பை வழங்குவதற்கு ஸ்மார்ட் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டும்.” – என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டுக்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, தவிசாளர் வஜிர அபேவர்த்தன எம்.பி., தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, உப தலைவர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

பௌத்த பிக்குகள் தலைமையிலான மதகுருமார்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பிரமுகர்கள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான கட்சி உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்