Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் ஜனாதிபதி

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் ஜனாதிபதி

3 minutes read

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை  திங்கட்கிழமை (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு – செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு மற்றும் சமர்ப்பிப்பு தொடர்பாக தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இன்று (12) காலை  கலந்துகொண்டார்.

நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் அதாவுதஹெட்டி, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மதுஷங்க திசானாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட உரை நாளை நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் நாளை திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இது இரண்டாவது வரவு செலவு திட்டமாகும்.

இம்முறை வரவு – செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வசதி குறைந்த மக்களுக்கு  நிவாரண திட்டங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வசதிகள் என பல முன்மொழிவுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன

அத்துடன் அரசாங்கத்துக்கு வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வரி அதிகரிப்பும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரவு – செலவுத்திட்ட விவாதம் செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் இடம்பெறவுள்ளது.

அத்துடன், வரவு செலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, குழுநிலை விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி  புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய, 2024 ஆம் நியதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 

இதேவேளை,  2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில்  சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தினால் சமர்ப்பிக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான 3இலட்சத்து 86084 கோடியே 6788000 ரூபா ஒதுக்கீட்டில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்காக மொத்தமாக  56445 கோடியே 8500000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளில் ஜனாதிபதிக்கான செலவீனம் மற்றும் அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளுக்கென மொத்தமாக 123711 கோடியே 6115000 ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமரின் செலவீனம் மற்றும்  அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கென  88726 கோடியே  5000000 ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதிக்கான செலவீனமாக 660 கோடியே 1150000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் செலவீனத்துக்காக 115 கோடியே 5000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று  பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சுக்கு 88611 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் வடக்கு மாகாணத்திற்கு 451 கோடியே 5000000 ரூபாவும் கிழக்கு மாகாணத்திற்கு 522 கோடியே 5000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான  3இலட்சத்து 86084 கோடியே 6788000 ரூபா ஒதுக்கீட்டில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்காக 1060 கோடி ரூபாவும் இதில் பௌத்தமதத்திற்காக 166 கோடி ரூபாவும் இந்து மதத்திற்காக 28 கோடியே 30 இலட்சம் ரூபாவும் கிறிஸ்தவ மதத்திற்காக 21 கோடி ரூபாவும்  இஸ்லாம் மதத்திற்காக 18 கோடி ரூபாவும் மிகுதி ஏனைய திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார  உறுதிப்பாடு, மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சுக்காக 72343 கோடியே 1495000 ரூபாவும் பாதுகாப்பது அமைச்சுக்காக 42372 கோடியே 5000000ரூபாவும் வெகுசன ஊடக அமைச்சுக்காக 255 கோடி ரூபாவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்காக 412 கோடியே 51000000 ரூபாவும் சுகாதார அமைச்சுக்காக  41028 கோடியே 9998000 ரூபாவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்காக 1961 கோடியே 2025000 ரூபாவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுக்காக 231கோடியே 9000000 ரூபாவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 4036 கோடியே 84000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கமத்தொழில் அமைச்சுக்காக 10042 கோடியே 3280000 ரூபாவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்காக 4298 கோடியே 3000000 ரூபாவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி  அமைச்சுக்காக 1917 கோடியே 4730000 ரூபாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்காக 4245 கோடி ரூபாவும் கல்வி அமைச்சுக்காக 23705 கோடி ரூபாவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்காக 1000 கோடி ரூபாவும் கைத்தொழில் அமைச்சுக்காக 910 கோடியே 8300000 ரூபாவும் கடற்றொழில் அமைச்சுக்காக 700 கோடி ரூபாவும் சுற்றாடல் அமைச்சுக்காக 213 கோடி ரூபாவும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 871 கோடியே 3000000 ரூபாவும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்காக 726 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்காக 7453 கோடியே  400000 ரூபாவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச்சேவைகள் அமைச்சுக்காக 707 கோடியே 5000000 ரூபாவும் தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு அமைச்சுக்காக 542 கோடியே 6800000 ரூபாவும் முதலீட்டு மேம்பாடு அமைச்சுக்காக 339 கோடியே 7670000 ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 14073 கோடியே 3500000 ரூபாவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சுக்காக 689 கோடியே 8000000 ரூபாவும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சுக்காக 1050 கோடி ரூபாவும் நீர்ப்பாசன அமைச்சுக்காக 8395 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More