Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீண்டும் இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்! – சுரேஷ் கண்டனம்

மீண்டும் இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்! – சுரேஷ் கண்டனம்

3 minutes read
பௌத்த பிக்குகளுடனும் இராணுவத்தினருடனும் சேர்ந்து மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கான அத்திவாரத்தைப் பொலிஸார் இடுகின்றனர் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.

வெடுக்குநாறிமலையில் மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களைக் கைது செய்திருப்பதுடன், கோயிலுக்குள் சப்பாத்துக் கால்களுடன் சென்று அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சிவ பக்தர்களின் உணர்வுகளை அவமதித்திருக்கும் பொலிஸாரின் செயற்பாடுகளைக் கண்டித்தும், அங்கு பௌத்த பிக்குகளின் தலைமையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகளைக் கண்டித்தும் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையின் அரசியல் சாசனத்தின் பிரகாரம் இலங்கை குடிமக்கள் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றவும் வழிபடவும் அவர்களுக்கு முழுமையான உரித்துண்டு. ஆனால், அதேசமயம் இலங்கையில் பௌத்தத்திற்கு முதலிடம் என்றும் கூறப்படுகின்றது. அதன் காரணமாக பௌத்த பிக்குகளும் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஒன்றிணைந்து ஏனைய மதத்தலங்களை அழித்தொழிப்பதும் அந்த இடங்களில் புத்த விகாரையைக் கட்டுவதுமான செயற்பாடுகளில் கடந்த பல தசாப்தங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் அதனைப் போன்றே திருகோணமலையிலும் கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் சிங்கள மக்களோ பௌத்த மக்களோ வாழாத பிரதேசங்களில் ஏனைய மதத்தலங்கள் இருந்த புராதான இடங்களில் புத்த விகாரைகளை நிறுவுகின்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் பூரணமான அனுசரணையுடனும் நிதிப்பங்களிப்புடனும் இந்த விடயங்கள் செயற்படுத்தப்படுகின்றன. கடந்த 8ஆம் திகதி சிவராத்திரியின்பொழுது வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் பல்லாண்டுகாலமாக வீற்றிருக்கும் ஆதிசிவன் கோயிலில் மகா சிவராத்திரியைக் கொண்டாடுவதற்காகக் கூடியிருந்த சிவபக்தர்களைப்  புத்த பிக்குகளும் பொலிஸாரும் அதிரடிப் படையினரும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டு அச்சுறுத்தியுள்ளதுடன் பலரைக் கைது செய்துமுள்ளனர்.

இரவு முழுவதும் கண்விழித்து சிவனை வழிபட்டு அவர் அருளைப் பெறுவதற்கான சைவ மக்களின் வழிபாட்டு முறையே மகா சிவராத்திரியாகும். வெடுக்குநாறிமலையில் மக்கள் வழிபடுவதற்கு வவுனியா நீதிமன்றமும் ஆணை வழங்கியிருக்கக்கூடிய நிலையில், இரவு வழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என்று சொல்வதற்கும் அங்கு சென்ற அடியார்களை அடித்துத் துன்புறுத்துவதற்கும் பொலிஸாருக்கு எந்தவித அதிகாரமோ உரிமையோ கிடையாது.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க அதன்பிரகாரமே அங்கு சகல வழிபாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே, அங்கு சட்டம்  ஒழுங்கு சீர்கெடுவதற்கான எத்தகைய முயற்சிகளும் இடம்பெறவில்லை. ஆனால், வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் முக்கியமாக கன்னியா வெந்நீரூற்று, குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை உள்ளிட்ட மேலும் பல புராதான சைவ சமய பிரதேசங்களில் புத்த பிக்குமார்களும் அவர்களுடன் இணைந்த குண்டர் கூட்டங்களும் சேர்ந்து தொடர்ச்சியாக பிரச்சினைகளை உருவாக்கி வருவது அரசுக்கும் ஜனாதிபதிக்கும் வெளிப்படையாகத் தெரியும். ஆனால், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எத்தகைய உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மிக நீண்டகாலமாக இந்நாட்டில் இன விடுதலைக்கான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரம் கோடி பெருமதியான சொத்துகள் அழிக்கப்பட்டன. நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்வதற்கும் அதுவே காரணமாகவும் அமைந்தது. இன்று மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கான அத்திவாரம் இடப்படுகின்றது.

தமிழ் மக்கள் மிகப்பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தென்பகுதியிலிருந்து பௌத்த பிக்குகள் வருவதும் இது தங்களது பிரதேசங்கள் என்று உரிமை கோருவதும் அங்கு புத்த கோயில்களைக் கட்டுவதும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதும் என்பது யுத்தத்துக்குப் பின்னர் ஒரு தொடர்கதையாக நிகழ்கின்றது. இவை கட்டுப்படுத்தப்படாவிட்டால் இலங்கை தொடர்ந்தும் வங்குரோத்து அடைந்த நாடாகவே இருக்கும். தமிழ் மக்களைத் துன்புறுத்துவதும் அவர்களது மத கலாசார நடவடிக்கைகளை சீர்குலைப்பதும் இந்த நடவடிக்கைக்கு இராணுவத்தினரையும் பொலிஸாரையும் ஈடுபடுத்துவதும் வெறுக்கத்தக்க அநாகரிகமான செயலாகும்.

ஜனாதிபதியும் அரசும் உதட்டளவில் இன நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசாமல் அதனைச் செயலளவில் காட்ட வேண்டிய தருணம் இது.

இலங்கைக்கு மிகப் பெருமளவிலான சுற்றுலாப் பிரயாணிகளாக இந்திய மக்களே வருகின்றனர். அவர்களில் மிகப்பெருமளவிலானோர் இந்துக்களாகவும் இருக்கின்றனர். அவர்களோடு மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளிலிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளும் புராதானச் சின்னங்களைக் கண்டு தரிசிக்கவே விரும்புகின்றனர். ஆகவே, அந்தப் புராதானச் சின்னங்கள் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்துவிட்டு, சுற்றுலாப் பிரயாணிகளே வாருங்கள் என்று கூவுவதில் அர்த்தமில்லை.

இலங்கையின் மிகப்பெருமளவிலான வருமானம் சுற்றுலாத்துறையையும் நம்பியிருக்கின்றது. ஆனால், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற சுற்றுலாத்துறையையும் நிர்மூலமாக்கும் நடவடிக்கைகளிலேயே இன்றைய அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்வதுடன் இலங்கையின் மதிப்பை சர்வதேச மட்டத்தில் குறைப்பதற்குமே உதவுமே தவிர, நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லாது என்பதை அரசுக்கும் ஜனாதிபதிக்கும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More