அதிதுரிதமாக பரவி வரும் கொரோனா மக்களே அலட்சியம் வேண்டாம்.

சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரானா வைரஸ் கடந்த 7 நாட்களில், மேலும் 20 நாடுகளுக்கும் பரவியுள்ளது.

சீனாவின் ஊகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரானா வைரஸ், ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. சீனாவில் மட்டும் கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் அண்டை நாடான தென் கொரியாவில் 1,700 பேர் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடான ஈரானில் கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அதன் அண்டை நாடான பாகிஸ்தானில் இருவருக்கு கொரானா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஈரானுடனான எல்லைகளை அந்நாடு மூடியுள்ளது. மேலும் ஈரானுடனான விமானப் போக்குவரத்தையும் ரத்து செய்துள்ள பாகிஸ்தான், பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

இதனிடையே வரலாற்றில் முதல்முறையாக சவுதி அரேபிய அரசு, இஸ்லாமிய புனித தலமான மெக்கா மதினாவுக்கு வெளிநாட்டினர் புனித பயணம் மேற்கொள்வதற்கு தடை விதித்துள்ளது.

அதேசமயம் உள்நாட்டு மக்கள் அந்த புனித தலங்களில் வழிபாடு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொரானா வைரசால் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் வரை பள்ளிகளை மூட அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே ஒசாகா பகுதியில் பெண்ணொருவருக்கு 2வது முறையாக கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் 92 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 7 நாட்களில் மேலும் 20 நாடுகளுக்கும் கொரானா வைரஸ் பரவியுள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இத்தாலி, ஈரானை சுற்றி அமைந்திருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்