சீனாவிலிருக்கும் அமெரிக்க பத்திரிகையாளர்களை சீனா வெளியேற்ற முடிவு!

அமெரிக்காவிலிருந்து கொண்டு சீன பத்திரிகையாளர்கள் பணிபுரிவதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின்  நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக சீன பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், அமெரிக்காவிலுள்ள சீன பத்திரிகை நிறுவனங்கள், அந்த நாட்டிலுள்ள தங்களது பணியாளர்கள், சொத்துக்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டிய நிலையையும் உருவாக்கியது. இது சீனாவுக்கு அதிர்ச்சியளித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் சீனாவிலுள்ள அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ், வோ‌ஷிங்டன் போஸ்ட், வோல் ஸ்ட்ரிட் ஜேர்னல் ஆகிய பத்திரிகைகளை சேர்ந்த பத்திரிகையாளர்களை வெளியேற்ற சீனா முடிவு எடுத்துள்ளது. இதற்கு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ இது பற்றி அவர் கூறுகையில்:-
சீனாவின் முடிவு துரதிர்‌‌ஷ்டவசமானது. இதை நாங்கள் பார்த்தோம். சீனா அதை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன்’’ என குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு சபை கருத்து தெரிவிக்கையில்:-
சீனா மற்றும் ஹொங்காங்கிலிருந்து அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்ற சீன கம்யூனிஸ்டு தலைவர்கள் முடிவு எடுத்து இருக்கிறார்கள். இது சீனாவைப்பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்காமல் மக்களை தவிக்க விடுகிற நிலையைத்தான் ஏற்படுத்தும். இதை சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’ என கூறியது.
சீனாவில் பத்திரிகை சுதந்திரத்துக்கு விழுந்துள்ள மரண அடி இது என பல்வேறு விமர்சகர்களும் கருத்து தெரிவித்தும் உள்ளனர்.
வணக்கம் லண்டனுக்காக
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

ஆசிரியர்