அமெரிக்காவை துரத்தும் கொரோனா பலி .

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் இருந்து பரவி அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா தொற்றுக்கு நேற்று மட்டும் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 92 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 50 ஆயிரமாக உயந்துள்ளது. இவர்களில் ஏறத்தாழ 17 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து 55 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

வைரஸ் தாக்கத்தினால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது.அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகளை வரும் 30ம் தேதி வரை திறக்கக்கூடாது என கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில், அந்நாட்டுத் துணை அதிபர் ரெய்க் மச்சாருக்கும், அவரது மனைவி ஏஞ்சலினாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.துருக்கியில் தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக ரம்ஜான் தினத்தன்றும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழுகைக்காக அதிகம் பேர் கூடுவதைத் தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ஈக்வடார் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் உள்ள வாரோனி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த 17 வயது ஒருவருக்கு முதன்முதலாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்