கருப்பின இளைஞர் கொலை கலவரத்தை அடக்க டிரம்ப் எடுத்த முடிவு..

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கருப்பின நபரை முட்டியால் அழுத்தி அவர் மரணத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது 3ம் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட் கிழமை மின்னியாபோலிஸ் நகரில் போலீஸ் அதிகாரி டெரெக் சவின்(Derek Chauvin)முட்டிக்கு கீழ் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிலாய்ட் சிக்கி கெஞ்சும் வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

பல்வேறு கண்டனங்கள் எழுந்ததையடுத்து டெரேக் உள்பட 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.இதனிடையே ஜார்ஜ் உயிரிழந்ததால் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டமும் வன்முறையும் வெடித்தது.இதன் விளைவாக நேற்று கைது செய்யப்பட்ட டெரேக் மீது கொலை மற்றும் படுகொலைக்கான வழக்கு பதியப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் மரணத்திற்கு நீதி கேட்டு வடக்கு கரோலினா, நியூயார்க், லாஸ் ஏஞ்சலிஸ் மான்ஹாட்டன் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பரவின. அதிபரின் வெள்ளை மாளிகை முற்றுகையிடப்பட்டதால், மாளிகை இழுத்து மூடப்பட்டது. சில இடங்களில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

ஆக்லாந்து உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பேரணியாகச் சென்றனர். அப்போது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் இரு காவலர்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலும் கடைகள் உடைப்பு, வாகனங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருவதால் கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தை வரவழைக்கவும், ரோந்துப் பணியில் ஈடுபடுத்தவும் அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பருடன் அவர் விவாதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவ்வாறு ராணுவம் களமிறக்கப்பட்டால் 1992ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸ் கலவரத்துக்குப் பின் தற்போதுதான் ராணுவம் வீதிகளில் வலம் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மின்னசொட்டா பகுதியில் ஊரடங்கை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் அம்மாகாண ஆளுநர் கையெழுத்திட்டார். இதன்படி இரவில் வெளியில் சுற்றுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்