ஜோ பைடனின் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பரிந்துரை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தமது துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸை பெயரிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள முதலாவது கறுப்பினத்தவரும் ஆசிய வம்சாவளி அமெரிக்கரும் இவராவார்.

இந்தியா ஜமேக்கா வம்சாவளியைச் சேர்ந்த இவர் கலிபோர்னிய செனட்டர் என்பதுடன், கலிபோர்னியாவின் முன்னாள் சட்ட மா அதிபருமாவார்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்காகப் போட்டியிட்ட கமலா ஹரிஸ், துணை ஜனாதிபதி பதவிக்கான முதன்னிலை வேட்பாளராக இருப்பாரென கருதப்பட்டது.

ஜோர்ஜ் புளொய்ட் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க பொலிஸில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இவர் வலியுறுத்தி வந்தார்.

கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதிப் பதவிக்கு பெயரிடப்பட்டதை அடுத்து, பதவியிலுள்ள துணை ஜனாதிபதி மைக் பென்ஸுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி விவாதம் நடத்தவுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிடுகிறமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக 2 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டிருந்தனர்.

2008 ஆம் ஆண்டு குடியரசுக்கட்சி சார்பில் சாரா பாலின், 1984 ஆம் ஆண்டு ஜனநாயகக்கட்சி சார்பில் ஜெரால்டின் ஃபெராரோ ஆகியோர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இதுவரை துணை ஜனாதிபதியாகப் பெண்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பதுடன், பெண்கள் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்