Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சொல்ல வல்லாயோ நீ | பணிவு வளவும் மல்லாடலும் | பாலசுகுமார் பக்கங்கள்

சொல்ல வல்லாயோ நீ | பணிவு வளவும் மல்லாடலும் | பாலசுகுமார் பக்கங்கள்

6 minutes read

சொல்ல வல்லாயோ நீ 3-4

பணிவு வளவில் எப்போதும் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது.ஆரும் வந்துவிட்டால் ஆச்சியின் சமையல் அயலூருக்கும் மணக்கும்.தம்பலகாமத்திலிருந்து அடிக்கடி ஆட்கள் வருவர் .உப்புக்க் கண்டம் சாக்குப் பையில் வரும் ஆச்சியின் உப்புக் கண்டக் கறி கொதிக்கும் போதே அதன் சுவை நாசிக்குள் புகுந்து நாலு பீங்கான் சோறு சாப்பிடத் தூண்டும்.

கலியாண வீடு ,சாமத்திய வீடு,கடுக்கன் பூட்டு சடங்கு என எல்லாவற்றிலும் ஆச்சியின் கை வண்ணம் உறைந்து கிடக்கும்.எங்கள் ஊரில் அந்த நாட்களில் பெண்கள் வயதுக்கு வந்தால் எப்படி சாமத்தியச் சடங்கு நடக்குமோ இந்த நாளில் வீடியோ காரர் சாமத்தியச் சடங்கு நடத்துவது போல் இருக்காது அது முழுக்க முழுக்க பெண்கள் அதிகம் பங்கு கொள்ளும் நிகழ்வாகத்தான் இருக்கும்.ஆண்கள் பெருமளவில் கலந்து கொள்வதில்லை நெருங்கிய ஆண் உறவுகள் மாத்திரம் பங்கு பற்றுவர்.சாமத்தியச் சடங்கில் எனக்கு எப்போதும் விருப்பமானது மஞ்சள் பூசி மஞ்சள் தண்ணி ஊத்தி கன மச்சி மாருக்கு நான் அந்த நாளில் தனித்த ஆள் எல்லாரும் என்னில் வந்து கூடுவர் நான் மஞ்சளால் முழுக வார்க்கப் பட்ட நாட்கள் பல.எல்லா மச்சி மாரின் சாமத்தியச் சடங்கிலும் இது நடந்தேறும்.அமத்தி வச்சு மஞ்சள் பூசுவதும் ஓட ஓட துரத்தி மஞ்சள் தண்ணி ஊத்துவதும் ஒரு கூழாம் பாண்டி விளையாட்டுப் போல நிகழும் வீதியால் யாரும் போனாலும் துரத்தி மஞ்சள் தண்ணி ஊற்றுவதும் உடுப்பில் மஞ்சள் அரைத்து வைத்து பூசுவதுமாக சில வேளை இது ஒரு வாரத்துக்கு தொடரும்.இப்போதான் நம்ம நாட்டில் மஞ்சளுக்கு தட்டுப்பாடும் தடையுமாய் போகிறதே.

நான் சொல்ல வந்ததை மறந்து வேறொரு பகுதிக்குள் புகுந்து விட்டேன் அந்த நாட்களில் வயதுக்கு வந்த இளந்தாரி மாருக்கு கடுக்கன் பூட்டு சடங்கு நடக்கும் ஊருக்குச் சொல்லி ஆட்டடித்து சாமத்திய வீட்டில் பெண்ணுக்கு தண்ணி வார்ப்பது போலவே எல்லாம் நடை பெறும் ஆனா மஞ்சள் பூசும் விளையாட்டு கிடையாது அலங்காரப் பந்தல் கட்டி அதில் கடுக்கன் பூட்டுக்குள்ளாகுபவரை உட்கார வைத்து வாழ்த்துச் சொல்லி மகிழ்வர் ஏற்கனவே காது குத்துவதால் வளைந்த பவுண் கடுக்கன் போடப் படும் எங்கள் காளியப்பு ஐயாவின் காதில் அவர் இறக்கும் வரை கடுக்கன் இருந்த்ததை நான் அறிவேன் ஊரில் அவர்கள் இறுதிக் காலம் வரை கடுக்கன் அணிந்து இருந்ததை சேனையூரின் வரலாற்று தடங்கள் வழியே நாம் அறியலாம்.கடுக்கன் பூட்டு மேள தாளம் ஒலி பெருக்கி என எல்லா தடல் புடலுடந்தான் நடை பெறும்.இந்த சடங்கு பின் வந்த நாட்களில் கலியாணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளைக்கு கடுக்கன் பூட்டு சடங்கு என பெயரளவிற்கு நடந்து வந்தது அது இப்போது இல்லை அந்த முறை உரு மாறி பால் வைத்து தண்ணீர் வார்த்தலோடு குறுகிப் போயிற்று .

நிலவு காலமானால் பணிவு வளவு முற்றம் அப்புச்சியின் நண்பர்களால் பல வேளைகளில் நிறைந்து கிடக்கும் நடராஜா மாமா,சின்ராசா பெரியப்ப்பா,இரத்தினம் மாமா,அருமத்துர மாமா ,தம்பலகாமத்தில இருந்து இரத்தினசிங்கம் மச்சான் வரும் காலங்களும் இதில் இணையும்.இன்னும் பலர் முன்றில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுத் திடலாய் மாறிப் போகும் .கை விளையாட்டு,கம்பு விளையாட்டு சிலம்பம் சுழற்றுதல் என முன்றில் திமிலோகப் படும்.அப்புச்சு இப்படியான வேளைகளில் ஒரு உறுமல் சத்தத்துடந்தான் களம் ஆடுவார் அவரது கை விளையாட்டை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு சாகசம் நிறைந்ததாய் இருக்கும்.எகிறிக் குதித்து ஏறிப் பாய்ந்து சக்கண விழுந்து தாவிப் பறந்து காற்றுடன் மோதி கனன்று தெறிக்கும் அற்புதம் நிகழும்.

இந்த கை விளையாட்டில் தனி ஒருவர் தன் திறனைக் காட்டுவதும் பின்னர் இருவர் இணைந்து மோதி விளையாடுவதும் யாருக்கும் காயம் வராமல் ஒரு கலையாய் அது வெளிப்பட்டு காண்போரை வியக்க வைக்கும்.அனேகமாக அப்புச்சியும் நடராஜா மாம்மாவும் விளையாடும் காட்சி அற்புதம்.

இது போலவே கம்பு விளையாட்டில் சின்ராசா பெரியப்பு அருமத்துர மாமா ஆகியோர் மோதி வெடிக்கும் காட்சிகள் கம்பை வைத்து பதுங்கி பாய்ந்து சுழன்று சுற்றி அடி வரை வீசி அடித்து வீழ்த்த நினைக்கும் வீர விளையாட்டு முன்றில் மூன்னோர் முதுசமாய் மூச்சடைக்க வைக்கும் விளையாட்டில் களம் சூடு கண்டு சுவை பல கொள்ளும்.

நானும் கொஞ்சம் கம்பு சுழற்றுவேன் கை கொண்டு மல்லாடுவேன் அப்புச்சி சொல்லித் தந்திருக்கிறார் சில வேளை பாடசாலைக் காலங்களில் பரிட்சித்து பார்த்திருக்கிறேன்

சொல்ல வல்லாயோ நீ -3

பணிவு வளவும்

பத்தினி அம்மன் வேள்வியும்

பணிவு வளவில் கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது வருசம் முழுவதும் நாங்கள் ஒன்று கூட மகிழ ஏதாவது வந்திற்றே இருக்கும்.எங்கள் ஐயாதான் கோயில் மணிய காரர் அவரின் சகோதரிகள் பொன்னாச்சியும் சின்னாச்சியும்தான் இந்தியாவுக்குப் போய் கோயிலுக்குரிய தட்டு முட்டுச் சாமான்கள் வாங்கி வந்து கொடுத்ததாக செப்புப் பட்டயம் ஒன்று கூறுகிறது.ஐயாவுக்கு பின் பெரிய ஐயா ,அதன் பின் ஆசப்பு என நீண்ட மரபு அது.

பத்தினி அம்மன் வேள்வி என்றால் உறவுகள் எல்லாமே முதல் நாள் வந்து சேர்வர் வேள்விக்கான ஆயத்தங்கள் நடக்கும் ஒரு புறம் வேள்விக்கான அடுக்குகள் நடக்க நாங்கள் நிலவொளியில் விளையாடி மகிழ்வோம் கற்பகம் மாமி வீடு கட்டுவதற்காக பெரிய அத்திவாரம் போட்டிருந்தார் அவர் கூட்டி கூட்டி கட்டாம் தறையான அவர் முற்றத்தில் பெரிய மணல் கும்பம் அந்த மணல் கும்பமே எங்கள் விளையாட்டு மைதானம் அவ முறைக்க முறைக்க நாங்கள் விளையாடுவம் அடுத்த நாள் அந்த மணல் கும்பம் மீண்டும் பழையபடி மாறி இருக்கும் அவர் இறக்கும் வரை அந்த வீடு கட்டுப் படவில்லை மணற் கும்பமும் மாறவில்லை.

சம்புக்களி பத்தினி அம்மன் கோயில் எங்கள் குடும்பத்து கோயிலாகவே இருந்தது.பணிவு வளவில் இருந்துதான் வேள்விக்கான எல்லாப் பொருட்களும் எடுத்துச் செல்லப் படும் அப்போது சம்புக்களி போகும் வளி காடு ஒரு வண்டில் போகும் பாதை மட்டும்தான் இப்போதுள்ள வேப்ப மரமும் வளைத்துக் கட்டிய ஆசும் பணிவு வளவு வீட்டில் இருந்த பத்தினி சிலை கண் மலர் சாத்தும் பலகை பூசைப் பொருட்கள் ஊரவர்கள் உறவுகள் வண்டிலில் ஏற்றப் பட்டு கோயிலடிக்கு கொண்டு போகப் படும் முருகேசுப் பெத்தப்பாவும் பிள்ளைகளும் கோயிலடியை வெளியாக்கி வைத்திருப்பர் .மருத நகர் கட்டக் கதிர்காமத் தம்பி அவர்களே தட்டம் கொண்டு போய் ஊருக்குள் காணிக்கை பெறுவார் கூனித்தீவு வரை காணிக்கை பெறப்படும் அது பெருமளவில் போதாது மீதி எங்கள் குடும்பத்து செலவுதான் .

பந்த வெளிச்சமும் பெற்றோல் மெக்ஸ் ஓளியும் அங்கங்கு மின்னும் அரிக்கன் லாம்புமாக இரவு நிகழ்வுகள் நடை பெறும் சம்புக் குழம் நிலவொளியில் அல்லி இலைகளில் பட்டு தெறித்து ஒளி தர விரால் மீன்கள் துள்ளி துள்ளி சில சலப்பு ஏற்படுத்த அந்த இடத்த்திலேயே குளத்துக் கரையாய் இருக்கும் பத்தினி அம்மன் இஅத்தில் உடனே கிணறு வெட்டி புதுத் தண்ணி புதிய மணத்தை பரப்பி நீற்கும் அந்த தண்ணியின் மண் மணம் மாறாத சுவை நான் எங்கும் காணாதது.

உறவுகளும் ஊரவர் சிலரும் கூடி கோயிலடியில் அடுத்த நாள் வேள்விக்கான ஆயத்தங்கள் நடை பெறும் .கூடாரம் கட்டுதலும் மடை வைத்தலும் ஒரு புறம் நடை பெற எண்கள் வேள்விக்குரிய பலகாரம் மோதகம் முறுக்கு என நாங்கள் வாயூற வாயூற நடக்கும்.யோகாம்பிகை மாமி,கமலம் மாமி,கறுத்த மாமி செளந்தரம் மாமி.அருந்தவ பெரியம்மா,ஆசையம்மா(அவர்கள்)ஆச்சி,அம்மம்மா இன்னும் பலர் பத்தினி அம்மன் வேள்வியில் எனக்குப் பிடித்தது படையலுக்கு வைக்கும் பொரிச்ச மோதகமும் ,கொளுக் கட்டையும் அத்தோடு அருந்தவ பெரியம்மாட அந்த தயிரும்.நான் எங்கும் ருசிக்காத ருசி அவைகளுக்கு.

ஒரு புறம் வேலைகள் நடக்க நாங்கள் நிலவு வெளிச்சத்தில் குளக்கரையில் மீன்கள் துள்ளுவதை பார்த்து ரசிப்பதும் கால் நனைத்து விளையாடுவதுமாக இருக்க்கும்.

ஐயாவுக்கு பின் பெரிய ஐயாதான் (விஸ்வலிங்கப் பரியாரியார்) வேள்வியின் நாயகராய் இருந்து பரிகல வேள்வியை வழி நடத்தும் பூசகர்

காளியப்பு ஐயா பத்தினி அம்மன் வேள்வி செய்தது கொஞ்சம் மங்கலான நினைவுகளாய் கசிந்து கிடக்கிறது அதிகாலை அவர் வேள்வி முகமாய் குளிர்த்தி பாடும் காட்சி தலைபாகயும் காதுக் கடுக்கந்கள் அசைய “ஒரு மா பத்தினி வந்தாள் உலகேழும் தளைத்திட வந்தாள் வந்தாள்” என பாடும் அந்த அபூர்வ குரல் இன்னும் என் காதுகளில் அதுவே என் இசை ஞானத்துக்கான முதல் பள்ளி பின்னாளில் பெரிய ஐயாவும் ஆசபுவும் அவர் வழியில் க்ய்ளிர்த்தி பாடியதையும் நானும் பின்பாளில் சேர்ந்து பாடியதும் ,கிழக்குப் பல்கலைக் கழகத்தில் “கண்ணகி குளிர்த்தி ” மேடை நிகழ்வாக தயாரித்த போது அதுவே அந்த இசையே அதற்கான அடிப்படையாய் அமைந்தமை வரலாறு.

(தொடரும்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More