முக்கா லெந்( length)காணும் ரெண்டு் களிசான் தைக்கலாம் எண்டு அமீர் ரெக்ஸ் சொல்ல அப்பாவும் சரியெண்டு துணியை வாங்கினார், yellow line தான் பள்ளிக்கூட uniform எண்டால் அப்ப ஒரே துணி . அப்பிடியே ரெண்டு வெள்ளை சேட்டுக்கும் தைக்க ஓடர் குடுத்திட்டு Bata வில கறுப்பு சொக்ஸ்ஸும் சப்பாத்தும் வாங்கிக்கொண்டு வெளிக்கிட்டம். கொப்பி புத்தகம் எல்லாம் list தந்தாப்பிறகு வாங்குவம் எண்டார் அப்பா.
அந்தக்கால அம்மாமாருக்கு முன் யோசனை அதிகம் செருப்பு, சப்பாத்து, சட்டை எண்டு என்ன வாங்கேக்க கொஞ்சம் பெரிய size ல வாங்கிறது ஏனெண்டா கன காலம் பாவிக்கலாம் எண்டு. அதேபோல பள்ளிக்கூட உடுப்பு எப்பவுமே தைக்கிறதுதான் A/L முடியும் வரை தையல்தான். ரெடிமேட் எண்டால் ரீசேட் மட்டும் தான் எண்டு நாங்கள் நம்பினம் , ஏனெண்டால் underwear கூட தைச்சுத் தான் போட்டது.
காலமை எழும்பி பிள்ளளயாரைக் கும்பிட்டிட்டு சகுனம் எல்லாம் பாத்து அம்மா தான் முதன் முதலா பள்ளிக்கூடம் கூட்டிக் கொண்டு போனவ. வெள்ளையும் சொள்ளையுமா வெளிக்கிட்டு நெஞ்சுக்குக் குறுக்கால school bag ஐ் கொழுவிக் கொண்டு, கையில drink bottleம் கொண்டு போனன். அங்க போனால் பள்ளிக்கூட வாசலில பழைய வெள்ளையும் நீலத்தோடேம் கொஞ்சப் பேர் புழுதியை கிளப்பிக் கூட்டிக்கொண்டும், கொஞ்சப் பேர் வாளீல தண்ணி தெளிச்சுக் கொண்டு வாங்கோ உங்களுக்கும் இனி இந்த வேலை இருக்கு எண்டு வரவேற்றினம். ஆக்களையும் வேலையையும் மேற்பார்வை செய்த ஆறுமுகவடிவேல் சேர் கண்ணாடிக்கு மேலால காகப்பார்வை பாத்து, பாலர் வகுப்பு எல்லாரும் அங்கால போங்கோ எண்டு அன்பா பிரம்பால இடத்தைக் காட்டினார். உள்ள போய் எழுதி ஒட்டின list இல பேரைத்தேடி B கிளாஸ் எண்டு பிரிவைப் பாத்து வகுப்புக்க போக பாதி வகுப்பு தான் நிரம்பி இருந்தது.
பஸ்ஸில போகேக்க வெறுமா இருக்கிற பக்கத்து சீட்டில ஆர் வந்து இருக்கப்போயினம், ஏதாவது வடிவான பொம்பளைப்பிள்ளை வருமா எண்டு இலவு காத்துக் கொண்டு நானும் இருந்தன். என்ட ராசி அப்பிடிப் போல ஒருத்தன் வந்து பக்கத்தில இருந்தான். என்ட மனிசி செய்த புண்ணியம் தான் என்னை கொண்டு போய் கலவன் பள்ளிக்கூடத்திலையும் கடுவன் வகுப்பில சேத்தது எண்டு நெக்கிறன். என்ன இன்னும் பஸ் நிரம்பேல்லையே எண்டு வெளீல எட்டிப் பாத்தா அழுதும் அழாமலும், உள்ள வந்தும் வராமலும் கொஞ்ச புதுச்சட்டைகள் அம்மாமாரின்டை சீலைக்குப் பின்னால் நிண்டது தெரிஞ்சிது.
ஐயா சேரின்டை பூசை, கனகரட்ணம் பிரின்சிப்பலின்ட நல்ல பிள்ளைகளா இருக்கோணும் எண்டு ஒரு நாப்பதடி உரை, எல்லாம் முடிச்சு வகுப்புக்கு வர பச்சைச் சீலை கட்டின சண்முகம் ரீச்சர் கையில அடி மட்டத்தை பிடிச்ச படி டாப்பைப் பாத்து பேரைக் கூப்பிடத் தொடங்கினா . அப்ப சாத்திரி மாருக்கு பஞ்சமோ தெரியேல்லை பாத்தா நாலு சதீஸ் , மூண்டு துசியந்தன், ரெண்டு பிரபாகரன் எண்டு ஒரே பேரோட கன பேர் இருந்தாங்கள். சண்முகம் ரீச்சர் எப்பவும் initial ஐ சொல்லித்தான் பேர் கூப்பிடுவா. அதைப் பாத்து நாங்களும் மாவன்னா, ஆவன்னா, ஈனா, எண்டு initial ஐயே பேரா மாத்தினம். ஒரு கிழமையால வகுப்புக்கு வந்த சண்முகம் ரீச்சர் நீர் ஓடிப்போய் டாப்பை எடுத்திட்டு வாரும் எண்டு சொல்ல, வகுப்பு முழு நேரமும் ஓடித்திரியிற மானா எண்டிற சதீஸ் monitor ஆனான் . வகுப்பை கூட்டிறதுக்கு ஆள் பிடிக்கிறது, கரும்பலகை அழிக்கிறது, டாப்பு( Register) எடுக்க office க்கு போறது, வெள்ளிக்கிழமை பூசை நாளுக்கு பூக் கொண்டு வாறது, ஆருக்கும் அடிக்கிற எண்டால் அதிபரின்டை அறையில இருந்து பிரம்பு எடுத்துக் கொண்டு வாறது தான் monitor இன்டை முக்கியமான வேலை. இடைவேளைக்கு முதல் ஆறுமுகம் ரீச்சர் தலைமையில பெரிய பெட்டியோட வந்த அண்ணாமார் நாலு கிறீம் கிறக்கர் மாதிரி பிஸ்கட் தந்திச்சினம். அதே பிஸ்கட் ரெண்டாம் வகுப்பு்படிக்கேக்க பெட்டி மாறி bag ல ஐங்கோணத்தில சின்ன மஞ்சி பிஸ்கட் மாதிரி வந்திச்சது அள்ளித்தாறதுக்கு ஒரேஞ் கலரில ஒரு cup ஓட. கொஞ்ச நாளால அதுகும் இல்லாமல் போச்சுது. அப்ப பள்ளிக்கூடத்தில prefects எண்டு இருக்கேல்லை, பிஸ்கட் குடுக்கிற வேலை செய்யிறாக்கள் தான் பெரிய ஆக்கள்.
முதாலாம் வகுப்பு கட்டிட வகுப்பில இருந்து “ முன்னேற இடமுண்டு வகுப்பேற்றப்பட்டுள்ளார் “ எண்டு மகேசன் ரீச்சர் தந்த ரிப்போட்டோட போனது ஹேமகுமாரி மிஸ் படிப்பிக்கிற கொட்டில் ரெண்டாம் வகுப்புக்கு. ரெண்டாம் வகுப்பு வரை ரெண்டு தரம் தான் மணி அடிக்கிறது எண்டு நெச்சம் , ஒண்டு பள்ளிக்கூடம் தொடங்கேக்க மற்றது முடியேக்க. ஏனெண்டால் வருசம் முழுக்க ஒரே மிஸ் தான். நேரத்தையும் மணி அடிக்கிறதையும் பாத்துப் பாத்து சமய பாட புத்தகத்தை எடுங்கோ, உறுப்பெழுத்து நாலு றூல் கொப்பியை எடுங்கோ எண்டு மாறி மாறி சொல்லுவா. ரெண்டாம் வகுப்பில தான் மணி அடிக்க ரீச்சர்மார் மாறிச்சினம். பாடம் மாறி ரீச்சர் வர ஐஞ்சு நிமிசம் செல்லும். அவ வந்து கொப்பி கொண்டராதவன் homework செய்யாதவன் எல்லாரையும் கூப்பிட்டு அடி குடுக்க பாதி வகுப்பு போயிடும்.
“இண்டைக்கு சித்திர வகுப்பு கொப்பியை எடுங்கோ “ எண்டு மிஸ் சொல்ல, புதுசா வாங்கின கொப்பி மூலை எல்லாம் மடங்கின படி வந்திச்சது . அப்ப பள்ளிக்கூட பை எண்டது இப்பத்த file அளவை சைஸ் தான். சுருண்ட சித்திரக் கொப்பீன்டை மூலையை நிமித்தவே நேரம் போயிடு்ம். இலையைக்கீறி கலர் அடிக்க ஆறு கலர் இருக்கிற Homerun pas பெட்டியை நாங்கள் எடுக்க, ஆனந்த் மட்டும் அப்பா Saudi ஆல கொண்டு வந்த platignum பெயின்றிங் stick ஐ வைச்சு அடிக்க மிஸ்ஸும் அதை நல்லா இருக்கு எண்டு சொல்ல அவன் எனக்கு ரெண்டாவது பிரண்ட் ஆனான். போன முதல் நாள் பக்கத்தில இருந்த மானா எண்ட சதீஸ் தான் முதல் பிரண்ட்.
பள்ளிக்கூடத்தில கடன் வாங்கி பிறகு கழிக்கிறது கணக்கைத்தவிர கனக்க இடத்தில இருந்தது. பள்ளிக்கூடத்தில எதுகும் கடன் வாங்கலாம் சாப்பாடு, தண்ணி, பென்சில் ரேசர், கட்டர், கொப்பி, ஒற்றை எண்டு என்னவும் கிடைக்கும். எல்லாத்துக்கும் ஒரு பாரி வள்ளல் இருப்பான். கடன் தா எண்டு கேக்கிறதும் உரிமையோட தான். ரெண்டு பேருக்கும் தெரியும் இது அறவிடமுடியாக் கடன் எண்டு. ஆனாலும் வாங்கின ரெண்டு துளி inkக்கு நாலு துண்டு மாங்காய் கைமாறும்.
இலை கீறேக்க கோடு வளைஞ்சு போக எச்சிலைத்தொட்டு அழிக்கிறம் எண்டு பேப்பரைக் கிளிச்சு அடி வாங்கேக்க தான் ரேசர் தேவைப்பட்டது, “அழிச்சிட்டுத் தாறன் ஒருக்காத் தா” எண்டு வாங்கினது என்டை முதலாவது கடன். ஒரு வெள்ளை றேசர் இருவத்தஞ்சியம், காசு கூட இருந்தா நீலம் வெள்ளை கலந்த றேசர் ஐம்பேசம். ஆனந்த் கொண்டு வந்தான் பிங் கலர் வாச றேசர் பொலுத்தீன கவரோட. பொலுத்தீனை கழட்டவேமாட்டான், அதை அவன் அழிக்கிறதலும் பாக்க மணக்கிறது தான் கூடவா இருந்திச்சுது. அதோட பென்சில் சீவ பாவிக்கிறது பழைய shave எடுத்த perma sharp பிளேட். அப்பா தரேக்கயே அது முழு மொட்டை எண்ட படியால் கையையும் வெட்டாது. ரெண்டாம் வகுப்பில முதல்முதலா வாங்கின cutter ஆல வழக்கமா வாங்கிற Chinese உருண்டைப் பென்சிலுக்கு பதிலா அறுகோண கறுப்பும் சிவப்பும் கோடு போட்ட நடராஜா பென்சிலை வாங்கிச்சீவி, சீவி வாற பூவில மயங்கி முழுப்பென்சிலையுமே பூவாக்கி வீட்டை கொண்டுவர எனக்கும் கட்டருக்கும் உறவு ஒரு நாளிலயே முடிஞ்சது.
பள்ளிக்கூடத்துக்கு முன்னால வெள்ளைத்தாடியோட ஒரு தாத்தான்டை கடை இருந்தது. உப்பு தூள் போட்ட மாங்காய், ஊறப்போட்ட நெல்லிக்காய், கறுவா, பினாட்டு, பொரிவிளாங்காய், புளூட்டோ, ஸடார் ரொபி, கலர் கலரா nice பப்படம் பீடா எண்டு வைச்சு வித்தவர். வந்து ஒரு கிழமையில புளுட்டோ வாங்கித் தந்த ஆரணன் மூண்டாவது பிரண்ட் ஆனான். ஒரு நாள் குடுத்து பல நாள் வாங்கிச் சாப்பிட வகுப்பைத் தாண்டி பள்ளிக்கூடத்துக்க பிரண்டஸ் எண்ணிக்கை கூடிக் கொண்டே போச்சுது.
ஆரம்ப பாடசாலைகள் எல்லாம் அனேமா ஆரவாரமான வகுப்புகள் ஏனெண்டால் எதுகும் கூட்டுப் பிரார்த்தனை தான். ரெண்டாம் வாய்ப்பாட்டில இருந்து, தேவாரம், பாட்டு, தமிழ் எல்லாம் மிஸ் சொல்லச் சொல்ல எல்லாரும் சேந்து திருப்பிக் கத்திறது.
பாடம் விளங்காட்டியும் பக்கத்து வகுப்புக்கு மேலாக கத்தி எங்கடை பலத்தைக் காட்டிறது. வகுப்புக்குள்ள தனித்தனி சண்டை பெரிசா வாறேல்லை ஆனால் வகுப்புக்கும் வகுப்புக்கும் சண்டை வரும், வந்தால் எல்லாரும் சேந்து அடிபட்டிட்டு பிறகு போய் Line இல அடி வாங்கீட்டும் வாறது. உள்ளகச் சண்டையில கொக்கன் பிரபா அடிப்பான் எண்டு நம்பிப் போனா அவன் அந்தப் பக்கம் கூட வரேல்லை. A class சண்டியன் குமரனைச் சமாளிக்க வந்தான் செந்தில் , தனிச்சு நிண்டு A class காரருக்கு குடுத்ததுக்குப்பிறகு அவங்கள் கொஞ்ச நாள் cease fire. அப்பவே தனிய அடிபட்டவன் வளந்தாப்பிறகும் தனிச்சுப் போய் அடிபட்டான் ஆனா இப்ப எங்கள் எல்லாருக்காகவும். களமாடின மறவனின் வீரம் அப்பவே வெளிப்பட்டிருந்தது அதே போல் எங்கள் வீரத்தனம் இன்னும் வீட்டை கூட….. !.
பள்ளிக்கூடம் விட்டு வெளிக்கிடேக்க இந்த அடி நாளைக்கு எண்டு ஒவ்வொரு நாளும் ஒருத்தனை அடிச்சிட்டு ஓடிப்போய் ரோட்டில இருக்கிற பழைய ரின் ஒண்டை காலால தட்டித் தட்டிக்கொண்டு போய் வீட்டு ஒழுங்கை வாசல் முடக்கில இருக்கிற குப்பைக்குள்ள goal அடிச்சிட்டு வீட்டை போக அம்மா இண்டைக்கு என்ன குளப்படி செய்தனி எண்டு கேட்டதை கவனிக்காம எல்லாத்தையும் கழற்றி எறிஞ்சிட்டு சாப்பிட ஓடிப்போனன்.
முன் வீட்டை பள்ளிக்கூடம் முடிஞ்சு காரில வந்திறங்கின மகனை கேற்றடீலயே வைச்சு அம்மா கேட்கத்தொடங்கினா இண்டைக்கு என்ன படிச்சனி? என்ன homework தந்தவை? எப்ப சோதினை ? எத்தனை மணிக்கு ரியூசன் எண்டு அடுக்கடுக்கா. அம்மாவிக்கு மகன் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க அடிக்கிற சோளகக் காத்தில ஒரு ரின் ரோட்டில தானா உருளிற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
Dr. T. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்
சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்
சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்
சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்