செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நீ ஃபாரெவர் | திரைவிமர்சனம்

நீ ஃபாரெவர் | திரைவிமர்சனம்

2 minutes read

நீ ஃபாரெவர் – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ஜென் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் :  சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, வை. ஜி. மகேந்திரா, நிழல்கள் ரவி, டொக்டர் வித்யா, பிரதோஷ், நோபுல் ஜேம்ஸ் மற்றும் பலர்.

இயக்கம் : அசோக்குமார் கலைவாணி

மதிப்பீடு : 2.5/5

புது முகங்களின் நடிப்பில் வெளியாகும் காதல் சார்ந்த திரைப்படங்கள் என்றால் இளம் தலைமுறை பார்வையாளர்களுக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு உருவாகிறது. அந்த எதிர்பார்ப்பை புது முகங்களின் முயற்சியில் வெளியாகி இருக்கும் ‘ நீ ஃபாரெவர் ‘ திரைப்படம் நிறைவேற்றியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

அம்மப்பாவின் ஆதிக்கத்தை எதிர்க்க இயலாமல் பிறந்த மண்ணிலிருந்து சென்னைக்கு வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார் அஜய் ( சுதர்சன் கோவிந்த்) எனும் இளைஞன். அம்மப்பாவின் கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர் வளர்ந்ததால்.. இன்றைய நவீன தலைமுறை இளைஞர்கள் உடன் இயல்பாக பழக முடியாமல் ஒரு எல்லைக்குள் தன்னை சுருக்கிக் கொண்டு, தாழ்வு மனப்பான்மையுடன் வாழும் அஜய்.. அன்பையும், காதலையும் இணையம் வழியாக கண்டறிவதற்கான பிரத்யேக செயலி ஒன்றை வடிவமைக்க திட்டமிடுகிறார்.

இதற்கான முயற்சி தொடர் தோல்வியை தருகிறது. இந்நிலையில் தொழிலதிபர் ஒருவர் அஜய்யின் நாளாந்த நடவடிக்கையை அவதானித்து, உறவு மேலாண்மையில் மிகவும் பலவீனமான உளவியலை கொண்டிருக்கும் உன்னால் எப்படி உணர்வு பூர்வமான விடயமாக கருதப்படும் காதலையும், அன்பையும் பற்றிய செயலியை வடிவமைக்க இயலும். முதலில் உறவு குறித்த புரிதலை நீ உனக்குள் ஏற்படுத்திக் கொள் ‘என அறிவுரை வழங்குகிறார்.

சென்னையில் உறவுகள் ஏதுமில்லாமல் திரைப்பட இயக்குநராக வேண்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மதி ( அர்ச்சனா ரவி) எனும் இளம் பெண்ணிடம்.. காதலைப் பற்றிய ஒரு கதையை எழுதினால்.. திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறேன் என தயாரிப்பாளர் ஒருவர் சொல்கிறார். இதனால் உற்சாகமடையும் மதி.. தனது அறை தோழியின் ஆலோசனைப்படி ஐஸ்வர்யா என்று பெயரை மாற்றிக்கொண்டு பிரத்யேக செயலி ஒன்றின் மூலம் இளைஞன் ஒருவனை காதலிக்க தீர்மானிக்கிறார்.

இந்த நிலையில் அஜய்யும் – ஐஸ்வர்யா என்று பெயரை மாற்றி வைத்துக் கொண்ட மதியும் சந்தித்து கொள்கிறார்கள். இருவரும் காதலைப் பற்றி என்ன புரிந்து கொண்டார்கள் ? சுயநல நோக்கத்துடன் காதலிக்கும் இவர்களின் காதல் என்ன ஆனது ?என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

காதல்- இந்த சமூகத்தில் குடும்பம் எனும் அமைப்பை சீர் குலைப்பதுடன்.. அந்த குடும்ப உறுப்பினர்களின் அடுத்த தலைமுறையினரின் உளவியலையும் பாதிக்கும் என்பதை சொல்லிய இயக்குநர் – ஆத்மார்த்தமான அன்பு பகிர்வு அனைத்திற்குமான தீர்வு என முன் வைத்திருப்பதையும் பாராட்டலாம்.

காதல் காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு இளம் தலைமுறையினரிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்பதையும் விவரித்திருப்பது நன்றாக இருக்கிறது.

முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களுக்கு பல அற்புதமான பட மாளிகை அனுபவம் கிடைக்கிறது. அஜய்யும், ஐஸ்வர்யாவும் முதன் முதலாக சந்திக்கும் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் ‘இதயமே..’ எனும் பாடல் சிலிர்க்க வைக்கிறது. ‘ஜின்னு..’ பாடலும், நடனமும் ரசிக்க வைக்கிறது.

திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படும் திரைப்பட இயக்குநர் கதாபாத்திரம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் புகை பிடிக்கும் காட்சி வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டிய மரபு.

அஜய் கதாபாத்திரத்தில் திரையில் தோன்றும் புதுமுக நடிகர் சுதர்சன் கோவிந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் செய்ய தயங்கும் அல்லது துல்லியமாக வெளிப்படுத்தத் தெரியாத கண்ணீர் விட்டு அழும் காட்சியில் நன்றாக நடித்து திறமையான நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார். அவரது உயரம் எக்சன் ஹீரோவுக்குரியது என்றாலும் … காதல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு வரவு.

மதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை அர்ச்சனா ரவி இயக்குநரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

பிராது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பிரதோஷ், முதல் முறையாக ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

ஆறுமுகம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வை. ஜி. மகேந்திரா அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.

ஒளிப்பதிவு – பின்னணி இசை – படத்தொகுப்பு – இவை அனைத்தும் இயக்குநரின் எண்ணத்திற்கு வலிமை சேர்த்திருக்கின்றது. ரசிகர்களுக்கு இப்படத்தை இன்னும் பல நிமிடங்களை கத்தரித்து விட்டும் சொல்லி இருக்கலாம்.

நீ ஃபாரெவர் – மனதை விசாலமாக்கும் செயலி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.