கவிதைகளோடு வாழ்ந்தவர்; கவிதைகளின் வழியே தனது வாழ்வையும், உணர்வுகளையும், காலத்தின் சாட்சியத்தையும் நிலைநிறுத்தியவர். அவரது கவிதைகள் உலகம் வாழும் வரை, அவர் எழுப்பிய குரலும் வாழும். அந்த வகையில், சேரனின் கவிதைகள் ஈழத் தமிழர்களின் ஒரு தலைமுறையின் கண்ணீரையும், எதிர்ப்பையும், தாயகத்தின் மீதான ஏக்கத்தையும் எதிர்காலத் தலைமுறைகளுக்குக் கடத்தும் இலக்கியச் சாட்சியங்களாகத் தொடர்ந்து வாழும்.
ஈழப் போர்க்கால நினைவுகளுக்கு உயிரூட்டிய கவிதைகளில் கவிஞர் சேரனின் கவிதைகள் தனித்துவமானவை. இளம் வயதில் எம்மை கவிதைக்குள் அழைத்துச் சென்றவர்களில் ஒருவராக சேரன் விளங்குகிறார்.
ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில், இளம் தலைமுறையினரை அரசியல் உணர்வுடனும் சமூக விழிப்புணர்வுடனும் எழுதத் தூண்டிய கவிஞர்களில் சேரனின் கவிதைகள் மிக உன்னதமான இடத்தைப் பெற்றிருந்தன. அவரது கவிதைகள் வெறும் இலக்கியப் படைப்புகளாக மட்டுமல்லாமல், ஒரு காலத்தின் வலி, இழப்பு, எதிர்ப்பு, கனவு, ஏக்கம் ஆகியவற்றின் குரலாகவும் ஒலித்தன.
இரண்டாவது சூரியோதயம், யமன் உள்ளிட்ட அவரது கவிதைப் படைப்புகள் எங்கள் நினைவுகளிலும், எங்கள் காலத்தின் வரலாற்றிலும் என்றும் நிலைத்திருக்கும். போரின் இருண்ட காலங்களில் அவரது கவிதைகள் பல இளைஞர்களின் மனங்களில் சிந்தனையைத் தூண்டிய எழுத்தாயுதங்களாக இருந்தன.
போர்க்காலக் கவிதைகளின் தனித்துவம்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் போரின் வலிகளையும், இன ஒடுக்குமுறையின் தாக்கங்களையும், மனித வாழ்வின் சிதைவுகளையும் கவிதைகளின் வழியாகப் பதிவு செய்த முக்கியமான கவிஞர்களில் ஒருவர் சேரன். கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தியின் மகனான சேரன், தனது இளமைக்காலத்திலிருந்தே கவிதை, இலக்கியம், அரசியல் மற்றும் சமூகச் சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஈழத்தின் நவீன கவிதை உலகில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர்.
சேரனின் கவிதைகளை வெறுமனே இலக்கியப் படைப்புகளாக மட்டும் பார்க்க முடியாது. அவை ஒரு காலத்தின் அரசியல் வரலாறு, மக்களின் கூட்டு நினைவுகள், போரினால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் துயரங்கள் ஆகியவற்றின் இலக்கியச் சாட்சியங்களாகவும் விளங்குகின்றன.
1970களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய சேரன், இலங்கையில் இன முரண்பாடுகள் தீவிரமடைந்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் வலுப்பெற்ற காலகட்டத்தில் தனது கவிதைகளின் வழியாக சமூக மற்றும் அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தினார். 1983ஆம் ஆண்டின் இனப்படுகொலைத் தாக்குதல்களும், அதனைத் தொடர்ந்து விரிவடைந்த உள்நாட்டுப் போரும் அவரது கவிதைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
போரில் உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்த மக்கள், காணாமல் போனவர்கள், தாயகத்தை இழந்தவர்கள், அகதிகளாகப் பயணித்தவர்கள் எனப் பல்வேறு மனித அனுபவங்கள் அவரது கவிதைகளில் இடம்பிடித்தன. அவரது கவிதைகளில் மரணம் என்பது வெறுமனே ஒரு தனிமனிதனின் முடிவாக வெளிப்படுவதில்லை. அது ஒரு சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் அடையாளமாகவும், ஒரு தலைமுறையின் கனவுகள் சிதைக்கப்பட்டதன் வெளிப்பாடாகவும் அமைகிறது.
அதேவேளை, சேரன் போரைப் பற்றிப் பேசும்போது வெறும் அரசியல் முழக்கங்களுடன் நின்றுவிடுவதில்லை. காதல், அன்பு, பிரிவு, தாய்மை, குழந்தைகளின் எதிர்காலம், மனித உறவுகள் ஆகியவற்றின் வழியாகப் போரின் கொடூரத்தை உணர்த்துகிறார்.
சேரனின் கவிதைத் தொகுப்புகள்
சேரனின் கவிதைப் பயணத்தைப் புரிந்துகொள்வதற்கு அவரது முக்கியமான கவிதைத் தொகுப்புகளைப் பார்ப்பது அவசியமாகும்.்இரண்டாவது சூரிய உதயம் 1983 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1978 முதல் 1982 வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட பத்து கவிதைகளைக் கொண்ட அவரது ஆரம்பகாலத் தொகுப்பு. இளமைக்கால அரசியல் உணர்வுகள், சமூக முரண்பாடுகள், மனித வாழ்வின் மீதான தேடல்கள் ஆகியவை இதில் வெளிப்படுகின்றன.
இதன் பின்னர் யமன் 1984இல் வெளியான கவிதை தொகுதியாகும். மரணம், வன்முறை, சமூக நெருக்கடிகள் போன்ற கருப்பொருள்களை மையப்படுத்திய ஒன்பது கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. ஈழத்தின் அன்றைய அரசியல் சூழலின் தாக்கத்தை இதில் காணமுடிகிறது.
கானல் வரி என்ற கவிதை தொகுப்பு 1989இல் வெளியானது. அவரது ஆரம்பகாலக் கவிதைகளில் குறிப்பிடத்தக்க தொகுப்பு. 1975 முதல் 1981 வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட 28 கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அவரது எலும்புக் கூடுகளின் ஊர்வலம் 1990இல் வெளிவந்தது. போரின் அழிவுகளையும், மனித உயிர்களின் மதிப்பிழப்பையும் உணர்த்தும் கவிதைகளைக் கொண்ட முக்கியமான படைப்பாகும்.
எரிந்து கொண்டிருக்கும் நேரம் என்ற தலைப்பில் 1993 இல் ஈழத்தின் போர் அனுபவங்களையும், எரிந்து கொண்டிருக்கும் சமூகத்தின் அவலங்களையும் கவிதை மொழியில் வெளிப்படுத்தும் தொகுப்பு வெளிவந்தது. பின்னர் In a Time of Burning என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளிவந்தது.
சேரனின் நீ இப்பொழுது இறங்கும் ஆறு 2000ம் ஆண்டில் வெளிவந்தது. 1975 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட நூறு கவிதைகளை உள்ளடக்கிய முக்கியமான தொகுப்பு. அத்துடன்
மீண்டும் கடலுக்கு 2004இல் வெளிவந்த 33 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, கடல், காதல், நினைவுகள், பிரிவு, புலம்பெயர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
காடாற்று என்ற கவிதை தொகுப்பு 2011இல் வெளியிடப்பட்டது. சேரனின் கவிதைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு தொகுப்பாகும். இவற்றுடன் உயிர் கொல்லும் வார்த்தைகள் உள்ளிட்ட பிற படைப்புகளும் அவரது கவிதை உலகின் பரப்பை எடுத்துக்காட்டுகின்றன.
உலகளாவிய இலக்கிய அங்கீகாரம்
சேரனின் கவிதைகள் தமிழின் எல்லைகளைக் கடந்து சர்வதேச இலக்கிய உலகிலும் கவனம் பெற்றுள்ளன. அவரது படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் மொழிபெயர்ப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த A Second Sunrise மற்றும் 2013ஆம் ஆண்டு வெளிவந்த In a Time of Burning ஆகியவை அவரது கவிதைகளை உலக வாசகர்களிடம் கொண்டு சென்றன.
மேலும், செல்வா கனகநாயகம் மொழிபெயர்ப்பில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த You Cannot Turn Away என்ற இருமொழித் தொகுப்பில் அவரது நாற்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 2018ஆம் ஆண்டு வெளிவந்த அஞ்ஞர் (Ajnar) மற்றும் 2019ஆம் ஆண்டு வெளிவந்த திணை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல் ஆகிய தொகுப்புகளும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னரான தமிழ் மக்களின் நினைவுகள், அதிர்ச்சிகள், இழப்புகள் மற்றும் வரலாற்று அனுபவங்களைப் பேசுகின்றன.
கவிஞர் சேரனின் கவிதைகள் ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்த இலக்கிய ஆவணங்களாகும். அவரது கவிதைகளில் கடல் என்பது வெறும் இயற்கைக் காட்சியல்ல; அது தாயகம், நினைவு, பிரிவு, அகதி வாழ்க்கை ஆகியவற்றின் குறியீடாகவும் அமைகிறது.
போர் முடிவடைந்துவிட்டதாக அரசியல் உலகம் அறிவித்தாலும், போரினால் ஏற்பட்ட காயங்களும், இழப்புகளும், நினைவுகளும் மக்களின் வாழ்வில் தொடர்ந்து நீடிக்கின்றன என்பதை அவரது பிற்காலக் கவிதைகள் எடுத்துரைக்கின்றன. ஒரு போரின் வரலாற்றை அரசியல் ஆவணங்கள் பதிவு செய்யலாம். ஆனால் அந்தப் போரினால் மனித இதயங்களில் ஏற்பட்ட காயங்களைப் பதிவு செய்வது கவிதைகளே.
கவிதைகளோடு வாழ்ந்தவர்; கவிதைகளின் வழியே தனது வாழ்வையும், உணர்வுகளையும், காலத்தின் சாட்சியத்தையும் நிலைநிறுத்தியவர். அவரது கவிதைகள் உலகம் வாழும் வரை, அவர் எழுப்பிய குரலும் வாழும். அந்த வகையில், சேரனின் கவிதைகள் ஈழத் தமிழர்களின் ஒரு தலைமுறையின் கண்ணீரையும், எதிர்ப்பையும், தாயகத்தின் மீதான ஏக்கத்தையும் எதிர்காலத் தலைமுறைகளுக்குக் கடத்தும் இலக்கியச் சாட்சியங்களாகத் தொடர்ந்து வாழும்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா