கொஞ்சம் பிளாஷ்பேக் | இது அந்த கால ஆச்சரியம்.. அப்பவே அவ்வளவு சம்பளம் வாங்கிய நடிகை!

 நடிகையின் சினிமா கதை

அந்த காலக் கட்டத்திலேயே, நடிகை ஒருவர் அவ்வளவு சம்பளம் வாங்கியது பெரிய சாதனை என்கிறார்கள்.

சினிமா ஆச்சரியங்களின் பொக்கிஷம். ஒவ்வொன்றுக்குப் பின்னும் பல கதைகள் இருக்கிறது. கோடம்பாக்கத்தில் எங்கோ ஒரு ஓரத்தில் உருண்டு, ஒதுங்கி கிடக்கிற ஒரு கல்லை கண்டால் கூட அதற்கும் ஒரு வரலாறு இருக்கும் என்பார்கள்.

கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள் அப்படித்தான் இந்த வரலாறும். அது, கிட்டப்பா காலத்து சினிமா காலகட்டம். ஏற்கனவே திருமணம் செய்திருந்த கிட்டப்பா தன்னோடு நாடகங்களில் நடித்த கே.பி.சுந்தரம்பாளை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

இந்த காதல் திருமணம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் 1927 ஆம் ஆண்டு நடந்தது இந்த திருமணம். சில வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு. மறைந்தார் கிட்டப்பா ஒரு கட்டத்தில் வேறு வழியே இன்றி இருவரும் பிரிந்தனர். பிரிந்திருந்த கணவருக்கு சுந்தரம்பாள் எழுதிய கண்ணீர் கடிதங்கள் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டன.

இந்நிலையில் தனது 28 வயதில் உடல்நலப் பிரச்னை காரணமாக மறைந்தார், கிட்டப்பா. 25 வயதில் விதவையான கே.பி.சுந்தரம்பாள், பிறகு வெள்ளை உடை அணிந்து துறவியாக வாழத் தொடங்கினார். நாடகங்களில் நடிக்க மறுத்து வந்தார்.

சம்மதிக்க மாட்டார்

இந்நிலையில், நந்தனார் கதையை படமாக தயாரிக்க விரும்பினார் வடநாட்டு தொழிலதிபர் அசன் தாஸ் என்பவர்.

இவர் சென்னையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர். இந்த நாடகத்தில் நந்தனராக நடித்த கே.பி.சுந்தரம் பாளையே சினிமாவிலும் நடிக்க வைக்க நினைத்தார். இதுபற்றி சுந்தரம்பாளிடம் கேட்க அவரது சொந்த ஊருக்குச் சென்றார். அங்கு அவர் இல்லை. அவருடைய தாய்மாமா இருந்தார். அவரிடம் பேசினார்.

சம்பளமாக ஒரு லட்சம்

நாடகங்களிலேயே நடிக்கவில்லை. சினிமாவில் நடிக்க கண்டிப்பாகச் சம்மதிக்க மாட்டார் என்று சொன்னார், கே.பி.சுந்தரம்மாளின் தாய்மாமனார். அவர் விடுவதாக இல்லை.

நீங்க சுந்தரம்பாளிடம் கேட்டுப் பாருங்களேன் என்று சொல்ல, அதிக சம்பளத்தைச் சொன்னால், வேண்டாம் என்று கிளம்பி விடுவார் என்று நினைத்தார் அந்த தாய்மாமா. (அப்ப ஆரம்பிச்ச இந்த டெக்னிக் இப்பவும் தொடருது) அதை போலவே, அப்படின்னா, சம்பளமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க முடியுமா? என்று கேட்டார்.

இந்தாங்க அட்வான்ஸ்

அசரவில்லை அந்த தயாரிப்பாளர். ‘அவ்வளவுதான, இந்தாங்க அட்வான்ஸ்’ என்று ரூ.25 ஆயிரத்துக்கு காசோலை கொடுத்துவிட்டுப் போய்விட்டார் அந்த தயாரிப்பாளர். இதை எதிர்பார்க்கவில்லை தாய்மாமா. விஷயத்தை ஊருக்குத் திரும்பிய கே.பி.சுந்தரம்பாளிடம் சொன்னார் தாய்மாமா. கேட்ட கே.பி.சுந்தரம்பாள், அட்வான்ஸ் வாங்கிய பிறகு நடிக்காமல் இருக்கக் கூடாது என்று நடிக்கச் சம்மதித்தார்.

பல கோடிக்கு சமம்

அந்தப் படம் ‘பக்த நந்தனார்’ என்ற பெயரில் 1935 ஆம் ஆண்டு உருவானது. மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரும் சுந்தரம்பாளுடன் நடித்தார். படத்தை மாணிக் லால் டாண்டன் என்பவர் இயக்கினார். இதில் உதவி இயக்குனராக பணியாற்றியவர், எல்லீஸ் ஆர்.டங்கன் என்ற அமெரிக்கர். இவர் பிறகு தமிழில் பல படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தது. பக்த நந்தனார் படம் சுமாராகத்தான் ஓடியது.

தீவிபத்தில் எரிந்தது

அந்த காலகட்டத்தில், கே.பி.சுந்தரம்பாள் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் என்பது, இன்று பல கோடிகளுக்கு சமம். இதனால், அந்த காலகட்டத்திலேயே இவ்வளவு சம்பளம் வாங்கிய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் கே.பி.சுந்தரம்பாள்.

இந்தச் செய்தி அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தப் படத்தின் நெகட்டிவ் தீவிபத்தில் எரிந்து போனது சினிமாவின் துயரம்! பிறகு நந்தனார் என்ற பெயரில் ஜெமினி நிறுவனம் 1942 ஆம் ஆண்டு ஒரு படத்தை தயாரித்தது.

நன்றி : tamil.filmibeat

ஆசிரியர்