Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா திரைநிலா 1 | யாழ்ப்பாண சமூகத்தின் முழுவடிவம் குத்துவிளக்கு திரைப்படம் | சுப்ரம் சுரேஷ்

திரைநிலா 1 | யாழ்ப்பாண சமூகத்தின் முழுவடிவம் குத்துவிளக்கு திரைப்படம் | சுப்ரம் சுரேஷ்

3 minutes read

அண்மையில் ஈழக்காண்பி Eelam Play அறிமுகமானத்தில் எம்மவர் சினிமா அனைத்தையும் ஒரு தளத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இன்று எமது இளையோர் ஈழத்தமிழ் சினிமாமீது அதிக கவனம் செலுத்திவரும் நிலையில் இவ்வாறான காண்பியற் தளங்கள் வருவது வரவேற்கப்பட வேண்டியதாகின்றது.  

ஈழத்தமிழ் போராட்டம் முனைப்பு பெறுமுன் வெளிவந்த திரைப்படங்கள் எவ்வாறு இருக்குமென தேடியபோது “குத்துவிளக்கு” திரைப்படத்தை இத்தளத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

யாழ்ப்பாண சமூகத்தில் படிந்துபோயுள்ள பல்வேறு பிரச்சனைகளை இந்த திரைப்படம் பேசுகின்றது. 1972ம் ஆண்டு வெளிவந்த கறுப்பு வெள்ளைத் திரைப்படமான குத்துவிளக்கைப் பார்த்து வியப்புக்கொள்ளாது இருக்கமுடியவில்லை. 

வேரூன்றிய சாதிமுறை, பணத்தைக்கொண்டு அளவிடும் வர்க்க வேறுபாடு, அரச உத்தியோகம் என்ற தகுதி மாயை, வேலையில்லாப் பிரச்னை, பெண்கள் வேலைக்குப் போவதில் உள்ள உடன்பாடின்மை, குடும்பச்சுமை என்ற ஒற்றைச்சொல்லில் சிக்குப்படும் பிள்ளைகள், தொலைவிலிருக்கும் தலைநகரின் நாகரிக கவர்ச்சி என பல பிரச்சனைகளை ஒரு திரைப்படத்தில் காட்ட முனைந்திருக்கின்றார்கள் ஆனாலும் திரைக்கதையை நன்றாகவே அமைத்திருக்கின்றார்கள். நேரம் போவது தெரியாமல் இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் ஆர்வமுடன் பார்க்கமுடிந்தது. 

1950 களில் வன்னியில் குறிப்பாக கிளிநொச்சி மாங்குளம் போன்ற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட படித்த வாலிபர்த் திட்டமும் அதன்மூலம் யாழ் குடாநாட்டிலிருந்து படித்த பல வாலிபர்கள் வன்னியில் நெற்பயிர் செய்கையில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறியமையும் வரலாறாகும். இந்த விடையத்தை முக்கிய திருப்புமுனையாக இத்திரைக்கதையில் அமைத்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் அதிஉயர் அடைவாவும் இதனைப் பார்க்கலாம். கதாநாயகனுடன் பல படித்த இளைஞர்கள் கூட்டுறவு விவசாயத் திட்டத்தின் மூலம் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கலாம் என்ற கனவுடன் ஈடுபடும் போது மனதில் மகிழ்ச்சி பொங்கினாலும் முடிவு துயரைச் சுமக்க வைக்கின்றது.  

இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் அருமை. அக்காலத்தில் புகழ்பெற்ற கவிஞர் ஈழத்து இரத்தினம் பாடல்களை எழுதியது மட்டுமன்றி திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதியுள்ளார். அத்துடன் அக்காலத்தில் பிரபலமான இசையமைப்பாளரான ஆர். முத்துசாமி இசையமைக்க, சங்கீத பூஷணம் குலசீலநாதன், மீனா மகாதேவன், ஆர் முத்துசாமி ஆகியோர் இப்பாடல்களைப் பாடியுள்ளார்கள். 

இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய டபிள்யூ. எஸ். மகேந்திரனை பாராட்டத்தான் வேண்டும். ஈழத்தமிழ் சினிமா பெரும் வளர்ச்சியடையாத காலங்களில் இவ்வாறான சினிமாவை இயக்கியிருப்பதும் அதனை திரையரங்குகளில் திரையிட்டதும் நிச்சயமாக சவாலான விடயம்தான். இந்த சவால்களையெல்லாம் தாங்கி சிறப்பாக தயாரித்த வி. எஸ். துரைராஜா செய்ததும் ஒரு சாதனைதான். இந்த கலைஞர்கள் எல்லோரும் இப்போது எப்படி இருக்கின்றார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் இவர்கள் எங்களுடைய சினிமா நட்சத்திரங்கள். தயாரிப்பாளர் இன்று மறைந்துவிட்டாலும் அவரது மனைவி அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றார் என்பது மகிழ்ச்சியே. அவருக்காவது எனது வாழ்த்துக்கள் சென்றடைய வேண்டுமென்பது எனது விருப்பம்.   

காட்சியமைப்பிலும் தொழில்நுட்ப பயன்பாட்டிலும் குறைபாடுகள் இருந்தாலும் உரையாடலுக்கான டப்பிங் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இதில் இடம்பெறும் “ஈழத்திரு நாடே” என்ற பாடல் அதில் வரும் ‘ஈழம்’ என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியினரால் அந்த காலங்களில் தடை செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது. அறிமுகப்பாடலான “ஈழத்திரு நாடே” பாடலில் பல இடங்களில் இலங்கையின் சிங்கக் கொடியினையும் சிங்கள அதிகார மையத்தையும் காட்டுகின்றார்கள், அப்படியிருக்கும் போது இவ்வாறான முளையிலே கிள்ளியெறியும் தேவை இலங்கை வானொலிக்கு ஏன் வந்தது. அதனால்தான் ஈழத்தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக மீண்டும் மீண்டும் ஆரம்பப்புள்ளியிலிருந்தே பயணிக்கவேண்டியுள்ளது. பீனிக்ஸ் பறவைபோன்று மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுகின்றது எமது சினிமா. இன்று அது இளைஞர்களின் கைகளில் புது வேகத்துடன் பயணிக்கத் தொடங்கியுள்ளது.  அவர்களுக்கான களமாக ஈழம்பிளே அமையுமென்பது மகிழ்ச்சியே.     

பார்க்க தவறவிட முடியாத திரைப்படம் “குத்துவிளக்கு” இவை போன்ற ஏராளமான ஈழத்தமிழ்த் திரைப்படங்களை ஈழம்பிளே ஊடாக பார்வையிட : https://ott.eelamplay.com/

சுப்ரம் சுரேஷ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More